பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு ரூ10 கோடி இழப்பீடு தந்து விடுதலை செய்ய வேண்டும்: பெ.மணியரசன்
சென்னை: ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப் பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் ரூ 10 கோடி இழப்பீடோடு, உடனடியாக விடுதலையும் வழங்க வேண்டும் என தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைக்காக உயிரீந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளான நவம்பர் 27 - மாவீரர் நாளையொட்டி, வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தண்டையார்பேட்டையில் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தற்சார்பு உழவர் இயக்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றார்கள்.
அப்போது, பேசிய பெ.மணியரசன், ‘நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரி தியாகராஜன் போன்றோரின் வாக்குமூலங்கள் வந்த பிறகும், பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதம்! அவர்கள் அனைவருக்கும் தலா 10 கோடி இழப்பீடு வழங்கி உடனே விடுதலை செய்ய வேண்டும்' எனப் பேசியுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் விழாவில் பேசியதாவது...

போராட வேண்டும்....
வயோதிகம் காரணமாக கொடியவன் இராசபக்சே பின்னால் இறந்து போனால், அவனை இலங்கையே நினைவில் வைத்துக் கொள்ளாது. ஆனால், மாவீரர்களோ மறுபடியும் மறுபடியும் நினைவில் கொள்ளப்பட்டு, மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். கரும்புலி வீரர்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பகத்சிங், திலீபன் ஆகியோர் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு நீடிக்க வேண்டுமென விரும்பினால், மொழி - இன விடுதலைக்கு நாம் போராட வேண்டும்.

டேவிட் கேமரூன்....
கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணித்தது. எங்கோ இருக்கும் சின்னஞ்சிறியத் தீவான மொரீசியஸ் புறக்கணித்தது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூன், அங்கு யாழ்ப்பாணத்தில் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் நம் தமிழ் மக்களை தானே நேரில் சென்று பார்த்தார். வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை அவைக் கூடுவதற்கு முன்பு, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் முறையாக விசாரிக்கப் படவில்லையெனில், அதே கூட்டத்தில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு ஏற்பாடு செய்வோம் என்று டேவிட் கேமரூன் எச்சரித்தார்.

காமன்வெல்த் மாநாடு....
குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்டவனைப் போல, பவுடர் பூசப் போய் கரி பூசிக் கொண்டவனைப் போல, உலக நாடுகளின் பாராட்டைப் பெறலாம் என்று காமன்வெல்த் மாநாடை இலங்கையில் நடத்தி அம்பலப் பட்டுப் போனான் இராசபட்சே ! இலங்கையில் நடந்த போர் குற்றங்களை, மனித உரிமைமீறலகளை பலநாட்டுத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக காமன் வெல்த் மாநாடு அமைந்தது.

தேர்தல் கட்டாயம்...
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம், நெருங்கி வருகின்ற மக்களவைத் தேர்தல் ஆகியக் காரணிகள், அவரை அம்முடிவை எடுக்க வைத்திருக்கின்றன.

ஒப்புக்கு சில தீர்மானங்கள்....
நம் போராட்டம் இலங்கையை, இந்தியாவை மட்டும் அசைக்கவில்லை. இங்கே ஆண்டு கொண்டிருக்கும் ஜெயலலிதா - கருணாநிதி ஆகியோரையும், நமக்குப் பின்பாட்டுப் பாட வைத்திருக்கிறது. இனத்துரோகி என இன்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கருணாநிதியின் கதி நமக்கும் வந்து விடுமோ என்றெண்ணி, அம்மையார் செயலலிதா தானும் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பதாகக் காட்டிக் கொள்ள ஒப்புக்கு சில தீர்மானங்களைப் போடுகிறார்.

புது யுகம்....
பழைய காலம் போலில்லாமல், புதிய சிந்தனையுடன் இளைஞர்கள் வருகிறார்கள். இணையதளங்களில், முகநூல் பக்கங்களில் விவாதிக்கிறார்கள். கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் வெற்றியே இது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த வெற்றி, தமிழர்கள் கட்சி சார்பற்று, இனச்சார்புடன் போராடியதன் விளைவு! இதை நாம் எக்காரணம் கொண்டும் மறந்துவிடலாகாது! நம் எதிரிகள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும் கயிறு சுருங்கிக் கொண்டே வருவதன் வெளிப்பாடு இது!

பேரறிவாளன் நிரபராதி....
இராசீவ் காந்தி கொலை வழக்கு பற்றி விசாரித்த சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஐ.பி.எஸ்., என்பவர், பேரறிவாளன் நிராபராதி என்றும், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது தான் கடமை தவறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தது உண்மையே என்றாலும், அந்த பேட்டரியைப் பயன்படுத்தித்தான் இராஜீவ் காந்தியைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்தி எனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொன்னார்.

வாக்குமூலம்...
ஆனால் ‘எனக்குத் தெரியாது' என்று அறிவு சொன்ன வார்த்தையை வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை. ஏனெனில், வாக்குமூலம் அளிப்பவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே எழுதுவது காவல்துறை மரபல்ல. காவல்துறை தயாரித்துள்ள வழக்குக்கு வலுச்சேர்க்கும் வகையில் தான், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். அதனால்தான், நான் பேரறிவாளன் சொன்னதை அப்படியே பதிவு செய்யவில்லை. இதன் காரணமாகவே பேரறிவாளன் மரண தண்டனை பெற்றிருக்கிறார் என்பது என் மனதை உருத்துகிறது என்று தியாகராஜன் கூறியிருக்கிறார்.

அப்பாவிகள்....
ஆனால், வழக்கில் சிக்க வைக்கப்பட்ட 26 பேரும் அப்பாவிகள். நவநீதம் என்ற சவநீதம் பூந்தமல்லி நீதிமன்றத்தில், 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கினார். அது, உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு சென்ற போது, அங்கு National Collective consiciousness. அதாவது, தேசத்தின் கூட்டு மனச்சான்றின்படி, இவ்வழக்கில் மரண தண்டனை வழங்கியாக வேண்டும் என்று அங்கே 4 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினார்கள்.

வேண்டுகோள்....
நாங்கள், கொலை செய்தவர்களை சும்மா விடச் சொல்லவில்லை. ஆனால், சும்மாயிருந்தவர்களை கொலை செய்யாதீர்கள் என்று தான் கேட்கிறோம்.

குற்றப்பரம்பரை....
தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்திய அரசும், வடநாட்டு ஊடகங்களும் குற்றப் பரம்பரைப் போல் நடத்தின; நடத்துகின்றன. தமிழீழத்திற்குப் படையனுப்பி, ஒன்றரை இலட்சம் மக்களை துடிக்கத் துடிக்க இனப்படுகொலை செய்தார்கள். இந்தக் கொலையை வைத்து, அம்மையார் ஜெயலலிதா, இராசீவ்வின் மறைவையொட்டி என்ன ஆட்டம் ஆடினார்? கூட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, அய்யா பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களுக்கு பொடா சட்டத்தின் கீழ் சிறை, விடுதலைப்புலிகள் மீதான தடை என ஜெயலலிதா ஆடிய ஆட்டமென்ன? கருணாநிதி ஆடிய ஆட்டமென்ன?

சட்டவிரோதம்...
இராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணையெல்லாம் தேவையில்லை. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 72 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூக்குத் தண்டனையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனையும், வாழ்நாள் தண்டனையிலுள்ள நளினி, இராபர்ட் பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிபதி கே.டி.தாமஸ், அதிகாரி தியாகராஜன் ஆகியோர் வாக்குமூலங்கள் வழங்கிய பிறகும், இவர்கள் அனைவரும் சிறையில் இருப்பது சட்ட விரோதம்! எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

விசாரணைக்குழு...
குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மனித உரிமை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இந்த வழக்கில் நடந்தத் தவறுகளை விசாரிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும்.

இழப்பீட்டுத் தொகை...
தூக்குத் தண்டனையிலிருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரையும், வாழ்நாள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி, இராபர்ட் பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடாக இந்திய அரசு, தலா 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட 19 பேருக்கும் தலா 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றம்....
தமிழ்நாட்டில் என்ன நிலைமை? இனப்படுகொலைப் போரில் இறந்து போன தமிழீழத் தமிழர்களுக்கான ஒரு நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை, ஜெயலலிதா அரசு இடித்திருக்கிறது. இதற்கு, இந்திய அரசின் தூண்டுதல் பின்னணியில் இருந்திருக்கலாம். அவ்வப்போது தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் காட்டிக் கொள்கிறாரே நடுவண் அமைச்சர் ஜி.கே.வாசன், அவர் அண்மையில் கருத்துத் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் தேவையில்லை என்றார். காங்கிரசுக் கட்சி கூடத்தான் தமிழர்களுக்குத் தேவையில்லை! அந்த வேண்டாத கட்சியை தலையில் சுமக்கிறானே தமிழன்! முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ்நாட்டில் வைப்பதில் என்ன கேடு? தமிழ்நாட்டில் வைக்காமல் வேறு எந்த நாட்டில் வைப்பது?

சிவாஜி சிலை....
இப்பொழுது, சென்னை கடற்கரைச் சாலையிலிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்றத் தமிழக அரசு முனைகிறது. சிவாஜி, தமிழ் இனத்தின் கலைப்பெட்டகமாக, கலையுலக ஆற்றலாக, தலைச்சிறந்த நடிகராக வெளிப்பட்டவர். அந்த வகையில், தமிழினத்தின் அடையாளச் சின்னமாக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி, தமிழ்த் திரையுலகின் பிதாமகன் ஆவார். அவரது சிலையால் வலது பக்கம் திரும்ப முடியாமல், இடது பக்கம் திரும்ப முடியாமல் போக்குவரத்துக்கு இடைஞ்சல் என தமிழக அரசுச் சொல்வது கற்பனை.

மாற்று அரசியல்...
எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள், தமிழ் இனத்துக்குக் கங்காணி வேலை பார்க்கும் கருணாநிதி - ஜெயலலிதா ஆகியோரைப் புரிந்து கொண்டு புறந்தள்ளி, மாற்று அரசியலைக் கையிலெடுக்க வேண்டும். தமிழ் இனத்திற்கான, இன அரசியலைக் கையிலெடுக்க வேண்டும். கட்சிகளைக் கடந்து நாம் ஒன்று சேர வேண்டும்'என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications