கோர்ட்டில் சுவாரஸ்யம்..."டேப்"பை எடுத்து வந்து வழக்குப் போட்டவர்களின் மார்பளவை அளந்த போலீஸார்!
சென்னை: தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான உடற்தேர்வில் மார்பளவைக் குறைத்து தகுதியிழப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த பி.அருண் மற்றும் ராதாகிருஷ்ணன், கணேசன், இளங்கோவன், பூபதி பாண்டியன் உள்பட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் அருண் தாக்கல் செய்த மனுவில், "நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை உதவி ஆய் வாளர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத் தொடர்ந்து நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்பட்டபோது சாதாரண நிலையிலும், மூச்சை உள்ளிழுத்து விரிவாக்கம் செய்யும் போதும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு எனக்கு மார்பு அளவு இல்லை என்று கூறி தகுதியிழப்பு செய்துவிட்டனர்.
விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் பூர்த்தியாகவில்லை என்றால், அந்த இடங்கள் காவல்துறையினரின் வாரிசுகளால் நிரப்பப்படும். அதற்காகவே என்னை வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்துவிட்டனர். அதனால், மீண்டும் மார்பு அளவு எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மற்ற மனுதாரர்களும் இதே கோரிக்கையையே முன்வைத்தனர்.
இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்களின் மார்பளவை தங்களது கண் முன்பாக அளந்து காட்டுமாறு போலீஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு பதிவாளர் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் மனுதாரர்களின் மார்பு அளவை மீண்டும் அளவெடுத்தனர்.
அப்போது முன்பு போலீஸ் தேர்வின்போது எடுக்கப்பட்ட அளவுக்கும், இப்போது எடுக்கப்பட்ட அளவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதை நீதிபதிகள் கண்டனர்.
பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவின்போது,
மனுதாரர் இளங்கோவனுக்கு 3-8-15 அன்று மார்பு அளவு எடுத்தபோது சாதாரண நிலையில் 96 சென்டி மீட்டரும், விரிவாக்க நிலையில் 98.5 செ.மீ. இருந்துள்ளது. 2.5 செ.மீ. வித்தியாசம். இன்று அவருக்கு மார்பு அளவு எடுத்தபோது சாதாரண நிலையில் 94 செ.மீ., விரிவாக்க நிலையில் 105 செ.மீ. இருந்திருக்கிறது. 11 செ.மீ. வித்தியாசம். இது மிகப்பெரிய வேறுபாடு ஆகும்.
"ஒரு மாதத்தில் தேவையான அளவுக்கு மார்பு அளவை அதிகப்படுத்திக் காட்ட முடியும்" என்பது குறித்து உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். இந்த வேறுபாடு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை இளங்கோவன், கணேசன் ஆகியோரது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக தெரிகிறது. எனவே அவர்களது மனுக்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். பி.அருண் உள்ளிட்ட 4 மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 21-ம் தேதி நடைபெறும்' என்று உத்தரவிட்டனர்.
எப்படி செய்யப்படுகிறது உடற்கூறு அளவீடு?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடற்கூறுத் தகுதித்தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பளவும், பெண்களுக்கு உயரமும் அளவீடு செய்யப் படுகின்றன.
ஆண்களுக்கு குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ., மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., விரிவடையும்போது குறைந்தபட்சம் 5 செ.மீ. அதிகரிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆண்களுக்கு உயரம் குறைந்தபட்சம் 167 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களுக்கு 159 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
அளவீடு செய்வதில் குளறுபடி ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்முறையாக இம்முறை உயரம் மற்றும் மார்பளவு எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் அளவீடு செய்யப்பட்டது. மேலும், இதில் அதிருப்தி ஏற்பட்டால் தேர்வாணைய உயரதிகாரிகளிடம் முறையிடும் வசதியும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications