துரோகி அழகிரி.. ஜெ.வின் தூண்டுதலால் செயல்படுகிறார்...மதுரை தி.மு.க. நிர்வாகிகள் கூட்டாக கொந்தளிப்பு
மதுரை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் கட்சிக்கு எதிராக பேசிவருவதாக அக்கட்சியின் மதுரை நிர்வாகிகள் கூட்டாக குற்றம்சாட்டியுள்ளனர்.
லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு குறித்து அண்மையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த மு.க. அழகிரி, அவர் கனவு காண்கிறார் என்று கலாய்த்தார்.
பின்னர் புதிய தலைமுறை தொலைகாட்சி அளித்த பேட்டியில், கருணாநிதி இல்லாமல் தி.மு.க இல்லை. கருணாநிதிக்குத்தான் மக்கள் வாக்களிப்பர். ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தினால் தி.மு.க தோல்விதான் அடையும் என்றெல்லாம் காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மு.க.அழகிரிக்கு எதிராக மதுரையில் இன்று தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர்.
தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி அலுவலகத்தில் தளபதி, வேலுச்சாமி, குழந்தைவேலு, ஜெயராமன், தமிழரசி, பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.

மதுரை தி.மு.க.
இக்கூட்டத்தில் மு.க.அழகிரியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்தியாளர்களிடம் தளபதி, வேலுச்சாமி கூட்டாக கூறியதாவது:
சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் அடுத்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக மு.க.அழகிரி சில கருத்துக்களை தேவையற்ற முறையில் தெரிவித்து இருந்தார். இப்படி கருத்து தெரிவிக்க மு.க.அழகிரிக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆளும் கட்சி கையாள்...
மு.க.அழகிரியின் கருத்து உள்நோக்கம் கொண்டது. தன்னை தற்காத்து கொள்வதற்காக அவர் இப்படி கூறியிருக்கிறார்.
ஆட்சியில் இருக்கும் நேரத்தில் அதிகாரத்தை கையில் எடுப்பதும், ஆட்சி இல்லாதபோது ஆளுங்கட்சியின் கையாளாக மாறி விடுவதும் மு.க.அழகிரியின் நடவடிக்கையாகும். ஏற்கனவே கட்சி கட்டுப்பாட்டை மீறி தேர்தல் நேரத்தில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க.வை தோற்கடிப்பதற்காக வேலைபார்த்தவர் இவர்.

முரசு சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டவர்..
ஏற்கனவே 2 முறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். கடந்த மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக வேலை செய்தவர். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க.விற்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று சொன்னவர். முரசு சின்னத்திற்கு ஓட்டு கேட்டவர்.

தோல்விக்கெல்லாம் அழகிரி காரணம்
இவர் தி.மு.க.வில் இல்லாமல் கடந்த தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்றோம். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கும், மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததற்கும் மு.க.அழகிரியின் செயல்பாடுகளே காரணமாகும்.

ஸ்டாலின் சந்திப்பு
தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வந்ததால் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார். கிராமம், கிராமமாக தொண்டர்களை சந்தித்து தி.மு.க.வின் கொள்கைகளை விளக்கி பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.

ஜெ... தூண்டுதல்...
ஆனால் அவர் மீது தேவையற்ற முறையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக மு.க.அழகிரி கருத்து தெரிவித்து வருகிறார். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி அ.தி.மு.க. தலைமையின் தூண்டுதலின்பேரில் தி.மு.க.வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.

கருத்து கணிப்புகள்
தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். இது வானிலை அறிக்கை போன்றதாகும். மழை வந்தாலும் வரும், வராமலும் இருக்கும். அதுபோல் தேர்தலில் ஏற்படும் வெற்றி தோல்விகளை இந்த கருத்து கணிப்புகள் நிர்ணயிக்காது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications