அப்பா… கண்ணீருடன் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே காத்திருக்கும் மகன்!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்குமாடிக் குடியிருப்பில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தனது தந்தை உயிருடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் கண்ணீர் மல்கிய கண்களுடன் காத்திருக்கிறார் மதுரையிலிருந்து வந்துள்ள அவரது மகன்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசு (45). இவர் சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான கட்டிடத்தில் கொத்தனாராக வேலை செய்துவந்தார்.
இந்த நிலையில் கட்டிட இடிந்து விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அவருடைய மகன் நந்தகோபால் மற்றும் உறவினர்கள் போரூர் வந்துள்ளனர்.

புகைப்படத்துடன் தவிப்பு
அங்கு அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையின் தனது தந்தையின் புகைப்படம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவரிடமும் அவர் அலைந்த காட்சி பரிதாபமாக இருந்தது.

வாரா வாரம் வந்து விடுவார்
தனது தந்தை குறித்து நந்தகோபால் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வேலை முடிந்ததும், சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எனது அப்பா வீட்டுக்கு வந்துவிடுவார். வழக்கம்போலவே, கடந்த சனிக்கிழமையும் (விபத்து நடந்த அன்று) எங்களுக்கு போன் மூலம் அடுத்தநாள் வீட்டுக்கு வரவிருப்பதாக கூறினார்.

போன் சுவிட்ச் ஆப்
ஆனால் அன்றைய தினம் இரவு அவருடைய போன் ‘சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு இருந்தது. உடனே உடன் வேலை பார்த்த அவருடைய நண்பர்களுக்கும் போன் செய்தோம். அனைவரது போன்களும் ‘சுவிட்ச்-ஆப்' ஆகியிருந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

தந்தை பெயர் இல்லை
மறுநாள் செய்தித்தாள்களில் கட்டட விபத்து குறித்து அறிந்து போரூர் வந்தோம். அங்கு காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரத்தை கேட்டறிந்தோம். அதில் எனது தந்தை பெயர் இல்லை.

எந்தத் தகவலும் இல்லை
தற்போது வரை எனது தந்தை குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் எனது குடும்பமே சோகத்தில் இருக்கிறது.

உயிரோடு கிடைக்க வேண்டும்
எனது அப்பா எங்களுக்கு உயிரோடு கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் கடவுளை கண்ணீருடன் வேண்டிக்கொண்டும் காத்துக்கொண்டும் இருக்கிறேன். எனவே மீட்புக்குழுவினர் எனது தந்தையை உயிரோடு தரவேண்டும் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

தவித்துக் கொண்டிருக்கும் உறவுகள்
நந்தகோபால் மட்டுமல்லாமல், மேலும் பலரும் தங்களுடைய உறவுகளின் நிலை குறித்துத் தெரியாமல் தொடர்ந்து தவிப்புடன் மருத்துவமனையிலும், விபத்து நடந்த இடத்திலும் காத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications