அன்று மாஃபா! இன்று நாசர்! பாதியில் பறிபோன அமைச்சர் பதவி! ஆவடி தொகுதி சென்டிமென்ட்!
சென்னை: ஆவடி தொகுதியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி பாதியில் பறிபோனாலும் மீண்டும் அந்தப் பதவி அவர்களை தேடி வரும் என ஒரு சென்டிமென்டை கூறி நாசரின் ஆதரவாளர்கள் தங்களை தாங்களே தேற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாஃபா பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு விளையாடிய விதியால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை பரிதாபமாக பறிகொடுத்தார் மாஃபா பாண்டியராஜன்.

ஜெயலலிதா கொடுத்த அமைச்சர் பதவியை இழந்து ஓ.பன்னீர்செல்வம் முகாமில் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு, 2017ல் நிகழ்ந்த ஓபிஎஸ் -இபிஎஸ் இணைப்பின் மீண்டும் அமைச்சர் பதவி தேடி வந்தது.
அப்போது மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் ஆவடி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகியிருக்கும் நாசருக்கும் அவர் வகித்த பால்வளத்துறை அமைச்சர் பதவி இப்போது பறிபோகியுள்ளது.
இதனிடையே இன்று காலை முதலே கூட்டம் கூட்டமாக ஆவடியில் உள்ள நாசர் இல்லத்துக்கு படையெடுத்த அவரது ஆதரவாளர்களும், திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும் ஆவடி தொகுதி சென்டிமென்டை கூறி தங்களை தாங்களே தேற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் ஆவடியில் வெற்றிபெற்ற மாஃபா பாண்டியராஜனிடம் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டதை போல், ஓராண்டில் மீண்டும் நாசர் அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என ஆருடம் கூறுகிறார்கள்அவரது ஆதரவாளர்கள்.
மேலும் நாசருக்கு வரும் காலத்தில் முக்கிய இலாக்காக்கள் கொடுக்கப்படாவிட்டாலும் ஏதேனும் ஒரு துறையை முதல்வர் ஒதுக்குவார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications