"ஓபிஎஸ் அணி என ஒதுக்காதீங்க".. விடாம "போஸ்ட்" போட்டுக் கொண்டிருக்கிறாரே மைத்ரேயன்!
ஓபிஎஸ் அணியினர் என்று தங்களை ஒதுக்க வேண்டாம் என்று பேஸ்புக்கில் மைத்ரேயன் எம்.பி. மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியினர் என்று தங்களை ஒதுக்காமல் அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும் என்று மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவில் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணைய வில்லை என்று முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே சுமுக உறவு இல்லை என்பதை போல் ஒரு கருத்தை மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், அதிமுக அணிகளின் உறவு குறித்து மைத்ரேயன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். இதை மறுத்த மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதில் தம்பிதுரை சொன்னது போல் நேற்று நான் பதிவிட்டிருந்தது தனது சொந்த கருத்து அல்ல என்றும், ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் கருத்து என்றும் பதிவு செய்திருந்தார். இது அதிமுகவினரிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்ரேயனின் இந்த கருத்துக்கு அதிமுக பிரமுகர் ஒருவர் தனது பதிவில், ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்கள் முக்கிய தலைவர்களிடமிருந்து வந்தால் அது எதிரிக்கு பலமாக அமையாதா. இதெல்லாம் தாங்கள் அறியாததா...கழக அடிமட்ட தொண்டனின் உணர்வுகளை வெளிப்படுத்துவது அல்லவே தலைவர்கள் கடமை. அவர்களை ஆசுவாசப்படுத்தி அமைதிப்படுத்தி ஒற்றுமைப்படுத்தி அறிவுரையல்லவா தொண்டர்கள் நாங்கள் எதிர்பார்கிறோம்.... என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிமுக பிரமுகரின் கருத்துக்கு மைத்ரேயன் பதில் அளித்துள்ளார். அதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்களை ஓபிஎஸ் அணி என்று ஒதுக்காமல் அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications