இந்த 4 பேரால் மகிழ்வது ஜெயலலிதாவா? கருணாநிதியா?: இது அரசியல் பட்டிமன்றம்!
-ஆர் மணி
தமிழ் நாட்டில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாகிவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்று நான்கு கட்சிகளைக் கொண்ட மக்கள் நலக் கூட்டியக்கம் முறைப்படியானதோர் அரசியல் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் ஒன்றாக பயணித்து வந்த இந்த நான்கு கட்சியினரும் தற்போது வரும் சட்டமன்றத் தேர்தலை ஒன்றாக சந்திக்க ஏதுவாக ஒரு அரசியல் அணியாக உருவாகி விட்டனர். இதற்கான முறையான அறிவிப்பை நவம்பர் 2 ம் தேதி சென்னையில் இந்த நான்கு கட்சிகளின் தலைவர்களும் வெளியிட்டனர். இதன் மூலம் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வந்தால் என்ன செய்யப் போகிறது என்ற ஹேஷ்யங்களுக்கும், கேள்விகளுக்கும் நான்கு கட்சிகளும் தெளிவான முடிவையும் தந்து விட்டன.

குறைந்த பட்ச செயற் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இதில் ஆச்சரியமான விஷயம் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் வெளியிடப் பட்டிருக்கும் குறைந்த பட்ச செயற் திட்டம். இதில் உள்ள முக்கியமான அம்சங்கள்; நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந் தோறும் 30 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். முதியோருக்கு வீடு தேடி வரும் தரமான மருத்துவம், விவசாயிகளுக்கு 20 மணி நேர மும்முனை மின்சாரம், நில உச்ச வரம்பு சட்டம் அமல்படுத்தப் பட்டு உபரி நிலம் நிலமற்றோருக்கு 2 ஏக்கர் வீதம் பிரித்தளிக்கப் படும், ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு. காவல் துறையினருக்கு சங்கம் வைக்க அனுமதி. பூரண மதுவிலக்குக்கு தேவையான நடவடிக்கைகள், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயர் கல்வியிலும் தாய் மொழிக் கல்வி கொடுக்கப் படும்.

ஈழம்- வைகோ, மார்க்சிஸ்ட் ஏழாம் பொறுத்தம்:
இந்த செயற் திட்டத்தில் முக்கியமான அம்சம் ஈழப் பிரச்சனை போன்றவை இடம் பெறாதது. தனி ஈழம் வைகோவின் அடிப்படைக் கொள்கை யென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதனை எப்போதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அதே போன்று கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் நியூட்டிரினோ விவகாரங்களும் குறைந்த பட்ச செயற் திட்டத்தில் இடம் பெறவில்லை. காரணம் இதிலும் வைகோவுக்கும், மார்க்சிஸ்ட் டுக்கும் ஏழாம் பொறுத்தம் என்பதுதான்.
இந்த செயற் திட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கை வண்ணம் அப்பட்டமாகவே தெரிகிறது. 2004 ம் ஆண்டில் முதன் முறையாக மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அமைந்தபோது இதே போன்றுதான் குறைந்தபட்ச செயற் திட்டம் (சிஎம்பி) உருவாக்கப்பட்டது. அப்போது அதனை உருவாக்கிய சிற்பிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹர்கிஷண் சிங் சுர்ஜித், சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி. பரதன் ஆகியோர் இருந்தனர். காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி இதில் முக்கியப் பங்காற்றினார். சில குறிப்பிட்ட ஷரத்துக்களுக்காக சில வாரங்கள் கூட இழுபறி நீடித்தது. இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம் பெறவில்லை என்று கூறித் தான் 2008 ல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மன்மோகன் அரசாங்கம் மேற்கொண்ட போது இடது சாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

வைகோ சற்றே பக்குவப்பட்டிருக்கிறார்...
தற்போது ஒரு மாநில சட்ட மன்றத் தேர்தலில் இந்த அளவுக்கு ஆழமான செயற் திட்டத்துடன் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாகி யிருப்பது ஆச்சரியமானதுதான். வைகோ தன்னுடைய பிரதான அடையாளமான தனி ஈழம் என்ற கோரிக்கையை சிஎம்பி யில் சேர்க்காமல் இருக்க ஒப்புக் கொண்டதும் வியப்புக்குரிய ஒன்றுதான். முதன் முறையாக வைகோ சற்றே பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பரிணமித்திருக்கிறார் என்பது ஆரோக்கியமான அரசியல் நிகழ்வு.
பொருளாதார ரீதியாக வலுவானதோர் செயற் திட்டத்துடன் மக்கள் நலக் கூட்டியக்கம் களம் கண்டிருக்கிறது என்றால், அரசியல் ரீதியாகவும் இன்னாருடன் சேருவோம், இன்னாருடன் சேர மாட்டோம் என்றும் கூறி விட்டது. திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் பாமக வுடன் கூட்டணி இல்லை யென்றும் மக்கள் நலக் கூட்டியக்கம் தெளிவு படுத்தி விட்டது. தேமுதிக, தமாக வுக்கு கதவுகள் திறந்திருக்கிறது என்று கூறியிருக்கிறது.

இவர்களால் யாருக்கு லாபம்?:
தற்போது எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி மக்கள் நலக் கூட்டியக்கத்தால் யாருக்கு லாபம் என்பதுதான். எப்போதுமே ஒரு ஆட்சி ஐந்தாண்டுகளைக் கழித்துவிட்டு மக்களிடம் மீண்டும் செல்லும் போது அரசுக்கு எதிரான உணர்வு, அலை வாக்காளர்களிடம் காணப்படும். கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் இரண்டு முறை எந்த ஆட்சியும் மீண்டும் வந்ததில்லை. இந்த முறை முதன் முறையாக ஜெயலலிதா அரசுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு, வெறுப்பு இதுவரையில் இல்லை.
இதுவரையில் இல்லை யென்பதுதான் முக்கியம். தேர்தல்களுக்கு இன்னமும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இந்த நிலைமை மாறலாம். ஆனால் ஜெயலலிதா வுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பலை வந்தாலும் வராவிட்டாலும் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவதால் யாருக்கு லாபம் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மேலும் எப்போதுமே திமுக வை விட அஇஅதிமுக வின் வாக்கு வங்கி என்பது பாரம்பரியமாகவே அதிகமானதுதான்.
இந்த பின் புலத்தில் அஇஅதிமுக வுக்கு எதிரான வாக்கு வங்கி குறைந்தது மூன்றாக வாவது உடைவதை ஆளும் கட்சி வலுவாக ரசிக்கவே செய்யும். இந்த அடிப்படையில் பார்த்தால் மக்கள் நலக் கூட்டணி யின் உதயம் யாருக்கு மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதை சுலபமாகவே உணர்ந்து கொள்ளலாம்.

நான்கு அணிகள் அமைவது அதிமுக வெற்றியை உறுதிப்படுத்தும்:
அஇஅதிமுக வை பொறுத்த வரையில் 2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் களம், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அமைவதையே விரும்பும். குறைந்தது நான்கு அணிகள் அமைவது அஇஅதிமுக வின் வெற்றியை ஐயத்திற்கு இடமின்றி உறுதிப் படுத்தி விடும். ஆனால் தேமுதிக கடைசி நேரத்தில் திமுக பக்கம் வந்து விட்டால் அப்போது நிலைமை தலை கீழாக மாறலாம்.
அந்தச் சூழ்நிலையில் திமுக - தேமுதிக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் சிதறுவது திமுக ஆட்சிக்கு மீண்டும் அடி கோலலாம். இதுவரையில் விஜயகாந்த் அதிகாரபூர்வமாக எந்த நிலைப் பாட்டையும் அறிவிக்கவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களில், 2011 மற்றும் 2014 தேர்தல்களில் கேப்டனின் நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், அவர் கடைசி நேரத்தில் ஒரு பெரிய கட்சிக் கூட்டணியில்தான் இருந்திருக்கிறார். 2011 ல் கடைசி நேரத்தில் ஜெயலலிதா விடம் வந்து சேர்ந்தார். அதே போல 2014 ல் பாஜக கூட்டணியில் ஒட்டிக் கொண்டார்.

விஜய்காந்தின் தியாகத்தில் திமுகவின் உற்சாகம்:
இந்த முறை திமுக வுடன் தேமுதிக வர வில்லை என்றால், அவரால் எத்தனை எம்எல்ஏ சீட்டுகளை வெல்ல முடியும் என்பது பூதாகரமான கேள்விதான். அது மட்டுமல்ல, துண்டு, துண்டாக எல்லா எதிர்கட்சிகளும் தேர்தலில் நின்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், அதற்கடுத்த ஐந்தாண்டுகளுக்கு, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஜெயலலிதா வை சமாளிப்பதென்பது கேப்டனுக்கு சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் அல்லவா. ‘மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வராமல் இருக்க எந்த தியாகத்துக்கும் நான் தயார் என்று விஜயகாந்த் பத்து நாட்களுக்கு முன்பு பேசியது திமுக வுக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது.

2ஜி, சொத்துக் குவிப்பு வழக்குகளே நிர்ணயிக்கும்...
ஆனால் இந்த எல்லா கணக்குகளும், கணிப்புகளும், யூகங்களும் இரண்டு நீதி மன்றத் தீர்ப்புகளால் தவிடு பொடியாகிப் போகலாம். ஒன்று 2ஜி வழக்கின் தீர்ப்பு. ஒருவேளை இந்த வழக்கில் தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வந்து, அதுவும் அ.ராசா வுக்கும், கனிமொழிக்கும் பாதகமாக வந்தால் திமுக அரசியல்ரீதியாக தீண்டத் தகாத கட்சியாக மாறிப் போகும்.
மற்றொன்று ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணையை தினந் தோறும் நடத்துவதற்கான தேதியை இம்மாதம் 23 ம் தேதி நிர்ணயிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் கூறியிருப்பது. ஒருவேளை ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கிலும் தேர்தலுக்குள் தீர்ப்பு வந்தால், அதுவும், ஜெ வுக்கு எதிரான தீர்ப்பாக இருந்தால், நிலைமை அப்போதும் தலை கீழாக மாறும்.

கொடநாட்டில் ஜெயலலிதா நிம்மதி:
ஆகவே இந்த எல்லா கணிப்புகளும், ஒரு விதத்தில் இந்த இரண்டு வழக்குகளின் போக்கால் தலை கீழாகப் போகலாம். ஒருவேளை இரண்டு வழக்குகளிலும் தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வராவிட்டால், மக்கள் நலக் கூட்டியக்கத்தால் பயன் பெறப்போவது கண்டிப்பாக திமுக கிடையாது.
மிகப் பெரிய அளவில் ஜெயலலிதாவுக்கு எதிராக கோபமோ, வெறுப்போ இதுவரையில் இல்லாதது நான்கு முனை போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிய தேர்தல் நிபுனர்களின் உதவியை நாட வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. நிச்சயம் ஜெயலலிதா புன்னகையுடனும், நிம்மதியுடனும்தான் கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார், ஸாரி பணியாற்றிக் கொண்டிருப்பார் என்று நம்பலாம்!












Click it and Unblock the Notifications