இளவரசியின் உறவினர் டாக்டர் இளஞ்சேரனின் மனைவி கொலை வழக்கு... மேலும் இருவர் கைது
சசிகலாவின் அண்ணி இளவரசியின் உறவினர் டாக்டர் இளஞ்சேரனின் மனைவி திவ்யா கொலை வழக்கில் ஏற்கெனவே கணவர், மாமியார், மாமனார் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வரதட்சிணை கேட்டு துன்புறுத்தப்பட்டு இளம்பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடியைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணன். இவரது பேரன் டாக்டர் இளஞ்சேரன். இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இளவரசியின் உறவினராவார்.
கடந்த 17-ஆம் தேதி இளஞ்சேரனின் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

கொலை வழக்கு
வரதட்சிணை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற யூகத்தின் பேரில் போலீஸார் இந்த மர்ம மரணத்தை கொலை வழக்காக மாற்றினர். இதன் பின்னர் திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் போலீஸார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும் சிலருக்கு தொடர்பு
இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீஸார் கருதினர். இதனால் திருச்சி சிறையில் இருந்த இளஞ்சேரன், முத்தழகன், ராணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீஸார் அவர்களை மன்னார்குடி நீதிமன்றத்தில் கடந்த 27-ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
மேற்கண்ட 3 பேரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க போலீஸார் மனு செய்தனர். ஆனால் அவர்களை போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என்று வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். எனினும் அவர்களை 3 பேரையும் 2 நாள்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

விசாரணையில் திடுக் தகவல்
அவர்கள் மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலையில் ராணியின் அண்ணன் சிவக்குமாருக்கும், கரூரைச் சேர்ந்த செந்தில் குமாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களில் செந்தில் குமார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இருவர் கைது
சம்பவம் நிகழ்ந்த அன்று திவ்யாவும், அவரது மாமனாரும் வீட்டில் இருந்தபோது அங்கு செந்தில் குமாரும், சிவக்குமாரும் சென்றனராம். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்து திவ்யாவை கடுமையாக அடித்துள்ளனர். இதில் திவ்யா உயிரிழந்துவிட்டார். மேலும் திவ்யாவை கொலை செய்துவிட்டு தன் மகனுக்கு பணக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று முத்தழகன் கருதியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications