மரியம் பிச்சையின் மனைவி தற்கொலை முயற்சி.. திருச்சி சிக்கல் பெரிதாகிறது!
திருச்சி: திருச்சி கலையரங்கம் தியேட்டர் விவகாரம் மேலும் பெரிதாகியுள்ளது. இந்த தியேட்டரை நிர்வகித்து வரும் மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் 3வது மனைவியான கஸ்தூரி என்கிற அமீனா பீ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது தந்தை பாலசுப்ரமணியம், திருச்சியிலேயே மிகப் பெரிய தியேட்டரான கலையரங்கத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கஸ்தூரி அதை நிர்வகித்து வருகிறார். கஸ்தூரி, மரியம் பிச்சையின் 3வது மனைவி ஆவார்.

தியேட்டரின் உரிமம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி வருவாய் துறை அதிகாரிகள் தியேட்டருக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு அனுமதி பெற்று மீண்டும் தியேட்டர் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வாடகை பணம் கட்டாததது மற்றும் உரிமம் புதுப்பிக்காதது ஆகியவற்றைக் காரணம் காட்டி உதவி கலெக்டர் கணேச சேகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று தியேட்டருக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து கஸ்தூரி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் புகார் கொடுத்தார். திருச்சி அதிமுக எம்.பி. குமாரின் தலையீட்டால்தான் இவ்வாறு அதிகாரிகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து நேற்று பிற்பகல் போலீஸ் பாதுகாப்புடன் தியேட்டர் திறக்கப்பட்டு படம் ஓட்டப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் மீண்டும் வந்து படத்தை நிறுத்தினர். படம் பார்க்க வந்தவர்களை வெளியேற்றி விட்டு தியேட்டருக்கு மீண்டும் சீல் வைத்தனர்.
இதனால் கஸ்தூரி வெகுண்டார். இன்று காலை அதிக அளவில் தூக்க மாத்திரைகளை அவர் சாப்பிட்டு விட்டார். இதையடுத்து தியேட்டர் ஊழியர்கள் அவரை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது...
கடந்த 3 வருடங்களாக மாவட்ட நலப்பணி நிதிக்குழு உறுப்பினர்களால் அலைகழிக்கப்பட்டு இன்று நடுவீதியில் என்னை நிற்க வைத்த கலெக்டர் பழனிச்சாமி, ஆர்.டி.ஓ.கணேச சேகரன், தாசில்தார் ரவி, கலெக்டருக்கான சட்ட ஆலோசகர் சரவணன் ஆகியோரே எனது தற்கொலை தூண்டுதலுக்கு காரணமானவர்கள்.
எனது சாவு கலையரங்கம் திரையரங்கிற்கு சரித்திரம் படைத்தவையாக இருக்கவும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுக்காத இவர்களிடம் எந்த நற்செயலையும் எதிர்பார்க்க முடியாது. மரியாதையை இழந்து வாழ்வதை விட மானத்துடன் சாவதே நலம். இந்த உலகை விட்டு அனுப்பி வைத்த இந்த நபர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறி உள்ளார்.
கஸ்தூரியின் தற்கொலை முயற்சியால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications