காரைக்குடி, கரூரில் பயங்கர தீ... 2 வீடுகள், குடோன் எரிந்து நாசம்.. உயிர்ச்சேதம் இல்லை!
காரைக்குடி: காரைக்குடியில் பழமையான குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. வீடுகளும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
காரைக்குடி மேற்கு கிருஷ்ணன்கோயில் அருகே ஒரு குடியிருப்பு உள்ளது. பழமையான வீடுகள் வரிசையாக உள்ளன. இங்கு நள்ளிரவில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதில் கல்யாணசுந்தரம் மற்றும் நாரயணன் என்பவர்களின் வீடுகள் தீயில் கருகி நாசம் அடைந்தன.

தகவல் அறிந்து திருப்பத்தூரிலிருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் யாரும் சிக்கவில்லை. ஆனால் பல லட்சம் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
கரூர் விசைத்தறி குடோனில் தீவிபத்து - ரூ. 40 லட்சம் சேத்
இதற்கிடையே, கரூரில் உள்ள விசைத்தறி குடோன் ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு சுமார் ரூ 40லட்சம் மதிப்பிலான ஜவுளி மற்றும் தளவாட சாமன்கள் எரிந்து நாசமாகின.

கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் அங்கமுத்து (63). இவர் இப்பகுதியில் விசைத்தறிகளை இயக்கி ஜவுளி உற்பத்தி செய்து வருகிறார். இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகளை ஏற்றுமதி செய்வதற்காக குடோன் அமைத்து தொழில் நடத்தி வருகிறார்.

நேற்று மாலை விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென பரவியதால் ஏற்றுமதிக்காக வைத்திருந்த ஜவுளிகளும்,மற்றும் விசைத்தறி தளவாட சாமான்களும் எரிந்து நாசமாகியது. சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் 3க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீயை போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தால் சுமார் ரூ 40 லட்சம் மதிப்பிலான ஜவுளி மற்றும் தளவாட சாமன்கள் எரிந்து நாசமானதாக தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications
