மதிமுக கலகம்: மல்லை சத்யாவுக்கு எதிரான தீர்மானம்- துரை வைகோ ஆதரவாளர்களுக்கு வைகோ கடும் எச்சரிக்கை
சென்னை: மறுமலர்ச்சி திமுக (மதிமுக) துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பியின் ஆதரவாளர்கள், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் ஏப்ரல் 20-ந் தேதி கூட்டப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயல் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.
மதிமுகவில் வைகோ மகன் துரை வைகோ, கட்சிப் பதவிகளுக்கு கொண்டுவரப்பட்டது முதலே அதிருப்தி குரல் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மதிமுகவின் பெரும்பாலான மூத்த தலைவர்கள், துரை வைகோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிவிட்டனர்.

மதிமுகவின் தொடக்க காலம் முதலே வைகோவின் வலதுகரமாக வரும் தற்போது துணைப் பொதுச்செயலாளரான, மல்லை சத்யாவும் துரை வைகோவுக்கான அதீத முக்கியத்துவத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதனால் மதிமுகவில் துரை வைகோவின் ஆதரவாளர்கள், மல்லை சத்யாவை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற மதிமுக, தொழிலாளர் முன்னணியின் பொதுக் குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. மதிமுகவில் ஜாதி பார்த்துதான் நியமனங்கள் செய்யபடுவதாகவும் அப்பொதுக் குழுவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் துரை வைகோ கோபப்பட்டு வெளியேறினார்.
மேலும் மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழுவில் பேசிய வைகோ, மல்லை சத்யா தமது உயிரை எப்படி எல்லாம் காப்பாற்றினார் என விவரித்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என எச்சரித்திருந்தார்.
ஆனாலும் திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் துரை வைகோ ஆதரவாளர்கள் ஒன்று கூடி, மல்லை சத்யாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த நிலையில் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் கட்சிக் கூட்டங்களை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன; இது கட்சிக் கட்டுப்பாட்டுக்கு எதிரானது; கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும். ஆகையால் இத்தகைய கூட்டங்களை நடத்தவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது என வைகோ எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications