கருகும் நெற்பயிர்களைக் காத்திட தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்.. மதிமுக எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டமானது விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் தென்பகுதியை பொறுத்தவரை தாமிபரணியிலுள்ள மருதூர் அணைக்கட்டின் மேலக்கால்-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் வடகால்-தென்கால் பாசனத்தை நம்பி மாவட்டத்தில் சுமார் 50ஆயிரம் ஏக்கரில் விவசாயப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த விவசாய நிலங்களில் நெல், வாழை பயிரிடப்படும் சூழலில், இதனை நம்பி பலஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தாமிரபரணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதுமான அளவில் தண்ணீர் இல்லை. இதுபோக பொதுப்பணித்துறையினரின் சரியான நீர் நிர்வாகமின்மையால் விவசாயத்திற்கும் போதுமான அளவில் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் இப்பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளாக நெற்பயிர் சாகுபடி முறையாக நடக்கவில்லை.
தற்போது பாபநாசம் அணையில் 86அடியும், மணிமுத்தாறு அணையில் 75அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. தாமிரபரணிக்கு தண்ணீர் தரும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதுமான அளவில் தண்ணீர் இருப்பு உள்ளதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களில் தற்போது நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில், மருதூர் அணையின் கீழக்கால் பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்திற்குட்பட்ட பாசனப்பகுதிகளான பத்மநாபமங்களம், தெற்கு தோழப்பண்பண்ணை, பிச்சனார்தோப்பு, ஸ்ரீவைகுண்டம், பேட்துரைச்சாமிபுரம், நளராஜபுரம், சுந்தரபாண்டியபுரம், திருப்புளியங்குடி, நத்தம், ஆயத்துறை, பராக்கிரபாண்டி, காடுவெட்டி, கீழ்பிடாகைகஸ்பா உள்ளிட்ட 30கிராமங்களில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் நடவு செய்து நன்கு வளர்ந்து கதிர் வரும் சூழலில் உள்ளநிலையில் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்தில் தண்ணீர் முற்றிலுமாக இல்லை. இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நெற்பயிர்கள் கருகியும் உள்ளன.
தற்போது நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளது. இந்தநேரத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் நெற்கதிர்கள் அனைத்தும் நெல்மணிகள் இன்றி பாழாகும் அபாய நிலை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி இல்லாத சூழலில் தற்போதுதான் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடமாவது போதுமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடனை வாங்கி நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தங்கள் கண்முன்பே நெற்பயிர்கள் கருகுவதை கண்டு விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே கருகும் நெற்பயிர்களை பாதுகாத்திட, உடனடியாக மருதூர் கீழக்கால் மூலமாக ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு பொதுப்பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் இரு தினங்களில் தண்ணீர் திறந்துவிடாதபட்சத்தில் மதிமுக சார்பில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள விவசாயிகளை திரட்டி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு வரும் 4ம் தேதி மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் துரிதநடவடிக்கை எடுத்து 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை மட்டுமல்ல, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கண்ணீர் விடும் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களையும் பாதுகாத்திட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அறிவித்தபடி சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications