இந்த ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை
சேலம்: கனமழை நீடிப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி உள்ளது. இன்று மாலைக்குள் இந்த ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்இருப்பு தற்போது 64.28 டி.எம்.சி., ஆக உள்ளது. அணையின் நீர்வரத்து தற்போது 20,046 கனஅடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 99.57 அடியை எட்டி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக டெல்டா மாவட்டங்களுக்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி வருகிறது. இதனால் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு காவிரியில் ஓடிவருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக படிப்படியாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது.
இதே போல் காவிரி டெல்டா மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு மட்டும் 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை மூடப்பட்டு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று பிற்பகலுக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி முதல் முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் மழை
இதனிடையே குமரி மாவட்டத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் பலத்தமழையால் கிராம,நகர,சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது.

குளங்கள் உடைந்தன.
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற் கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.ஊத்துமலை,புளியரை உள்ளிட்ட பகுதிகளில் குளங்கள் உடைந்தன.
நிரம்பிய அணைகள்
மேற்க்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக இம்மாவட்டத்திலுள்ள 11அணைகளில் குண்டாறு, அடவினைனார், கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, வடக்கு பச்சையாறு, நம்பியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பிமறுகால் வடிகின்றன.

அணைகள் திறப்பு
இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழக அரசு விவசாயத்திற்கு தண்ணீரை திறக்கவும் அனைத்து குளங்களையும் நிரப்பவும் உத்திரவிட்டுள்ளதால் இன்று அடவி நைனார்,கருப்பாநதி உள்ளிட்ட அணைகள் திறக்கப்படுகின்றன.
தீர்ந்த தண்ணீர் பஞ்சம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 வருடமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றியதால் பெரும்பாலான அணைகள் வறண்டு காணப்பட்டன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விவசாய பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை கைகொடுத்துள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து இல்லாமல் இருந்த பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பல்வேறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் 3 ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்கள் நிரம்பி வருவது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
முழு கொள்ளளவு
திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக கொள்ளளவு கொண்டு மிகப்பெரிய அணை பாலாறு பொருந்தலாறு அணை. 65 அடி உயரம் உள்ள இந்த அணையில் தற்போது 63 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. அணைக்கு வரும் 1000 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
42 குளங்கள் நிரம்பின
பழனியில் உள்ள மற்றொரு அணையான வரதமாநதி அணை தொடர் மழையின் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே நிரம்பி வழிந்து வருகிறது. இதில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் 3 ஆண்டுகளாக நிரம் பாதிருந்த வையாபுரி குளம், இடும்பன்குளம், சிறுநாயக்கன்குளம் உள்ளிட்ட 42 குளங்கள் நிரம்பியதுடன் 20 குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காமராஜர் அணை
இதேபோல் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஆத்தூர் காமராஜர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 24 அடி. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆண்டுகளுக்குப் பின்
அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதியின் மொத்த உயரம் 74 அடியாகும். இந்த அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி இருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அணையில் இருந்து நேற்று முதல் 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வெங்கிடாஸ்திரி கோட்டையில் உள்ள சிறுவன் குளத்திற்கு செல்கிறது. அந்த குளம் நிரம்பியதும் தாமரைக்குளம், சொட்டான்குளம், ரெங்கப்பன்குளம் உள்ளிட்ட 5 கண்மாய்களுக்கு சென்று 6,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
பரப்பலாறு அணை
இதுமட்டுமின்றி கடந்த 3 வருடமாக தண்ணீர் வரத்தே இல்லாமல் இருந்த ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்தம் உள்ள 90 அடியில் தற்போது 86 அடிக்கு தண்ணீர் உள்ளது. மேலும் நங்காஞ்சியாறு, குடகனாறு, அழகாபுரி அணை ஆகியவற்றுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக பழைய அணை மற்றும் புதிய அணை உள்ளது. தொடர் மழையின் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே 2 அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொடைக்கானலில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications