மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 78 அடியாக சரிவு.. கவலையில் டெல்டா விவசாயிகள்
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடியாக சரிந்ததால் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குறுவை சாகுபடி பயிரை காப்பாற்ற தண்ணீர் கிடைக்குமா? என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடையத் தொடங்கியுள்ளனர்.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டது.

நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி 79.59 அடியாக இருந்த நீர்மட்டம், பின்னர் பருவமழை காரணமாக அதிகரித்தது. 100 அடிக்கும் குறையாமல் மேட்டூர் அணை நீடித்தது.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தினமும் 1 அடி வீதம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 79.50 அடியாக இருந்தது. இன்று 1 அடி குறைந்து 78 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 78 அடியாக சரிந்துள்ளதால் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

நீர் இருப்பு 42.24 டிஎம்சியில் இருந்து 41.36 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 198 கனஅடியிலிருந்து 161 கனஅடியாகவும் குறைந்தது. பாசனத்துக்கு அணையின் மின் நிலையம் வழியாக விநாடிக்கு 2,000 கனஅடியும், சுரங்க மின் நிலையம் வழியாக 8,000 கனஅடியும் என 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தமிழகத்தின் பங்கான காவிரி நீரை திறந்து விட மறுத்து வருவதால் மேட்டூர் அணைக்கு வருகிற நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. குறுவை சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில் அணை நீர்மட்டம் குறைவது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது. அதேபோன்று, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications