“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!
தென்காசி: தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பாக நள்ளிரவில் பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், இதுவரை இதுபோன்ற சூழல் ஏற்பட்டது இல்லை என்றும், தவெக அரசை குற்றம்சாட்டி உள்ளனர்.
தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் தங்களது ஊர்களுக்குத் திரும்புவதற்காகப் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு, போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பயணிகளின் கோரிக்கை
இரவில் வீடு திரும்பப் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள், பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக ஒன்று திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.

போலீசாருடன் வாக்குவாதம்
பயணிகளின் திடீர் மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது, பேருந்து பற்றாக்குறை குறித்துப் பயணிகளும், பெண்களும் போலீசாருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் காவல் துறைத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த திடீர் மறியல் போராட்டத்தால் தென்காசி பேருந்து நிலையப் பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தென்காசியில் தவெக அவுட்
தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வெற்றிக்கொடி நாட்டிய தவெக, தென்காசி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களே வென்றனர். தவெக வேட்பாளர்கள் பெரும்பாலும் 3வது இடமே பிடித்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு வாக்களிக்காத தென்காசி மாவட்ட மக்களை தவெகவினர் பழிவாங்குவதாக அந்த மாவட்ட மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications