சரத் "பவுடர்" வீடியோ.. கீர்த்தனா "ஆங்கில" ரீல்ஸ்.. விஜய்க்கு தலைவலியாகும் ஆர்வக்கோளாறு அமைச்சர்கள்!
சென்னை: தமிழக அரசியல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் டி.சரத்குமார் மற்றும் எஸ்.கீர்த்தனா சம்பந்தப்பட்ட இரண்டு வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி, அரசுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. முதல்வர் விஜய்க்கு ஆர்வக்கோளாறு அமைச்சர்கள்.. இளம் அமைச்சர்களின் முதிர்ச்சியற்ற தன்மையால் கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.. அப்படி என்னதான் நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.

அமைச்சர் சரத்குமார் வீடியோ: என்ன நடந்தது?
கடந்த சில தினங்களுக்கு முன் முதலில் அமைச்சர் சரத் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. ஐபிஎல் போட்டி நடக்கும்போது மைதானத்தில் அமைச்சர் சரத்குமார் அமர்ந்திருக்கும் ஒரு வீடியோ திடீரென இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், அவர் தனது மொபைல் போன் திரையில் ஏதோ ஒரு பொருளை வைத்து, ஏடிஎம் கார்டால் தூளாக்கிக் கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும் பொது இடத்தில் அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்துகிறாரா? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். இந்த வீடியோ தமிழ்நாட்டையே உலுக்கியது.
அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
திமுக உள்ளிட்ட கட்சிகள், இதுகுறித்து தீவிர விசாரணையும், அமைச்சரின் ராஜினாமாவும் வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுத்தன.
இதற்குப் பதில் வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமார், இது சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ. அப்போது மைதானத்தில் என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. வாந்தி எடுக்கும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையைத்தான் நசுக்கிக் கொண்டிருந்தேன். இதைத் தவறாகப் புரிந்துகொண்டு அரசியலாக்குகிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.
ஆனால், மருந்தை ஏன் மொபைல் போன் திரையில் வைத்து நசுக்க வேண்டும்? என்று எதிர்க்கட்சிகள் இன்னும் சரமாரியாகக் கேள்வி கேட்டு வருகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் சரத் இன்ஸ்டாகிராம் கணக்கையே மூடிவிட்டு சென்றுவிட்டார்.
அமைச்சர் கீர்த்தனா சர்ச்சை
சரத்குமார் விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்போதே, தொழில்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனாவின் வீடியோ ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விருதுநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோதுதான் இந்தச் சம்பவம் நடந்தது.
வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர், ஒரு மாணவியை எழுப்பி ஆங்கிலத்தில் பேசச் சொன்னார். எதிர்பாராத கேள்வியால் அந்த மாணவி திகைத்துப்போய் பேச முடியாமல் நின்றார். உடனே அமைச்சர், முன்னாடி பெஞ்ச் மாணவர்களுக்கே இப்படி என்றால், பின்னாடி பெஞ்ச் மாணவர்களின் நிலை என்னவாகும்? என்று கிண்டலாகக் கேட்டார்.
அமைச்சரின் இந்த வார்த்தைகள், அரசுப் பள்ளி மாணவர்களை மனரீதியாகக் காயப்படுத்தியதாக இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக ஆர்வலர்கள் பலரும், அமைச்சர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, பொதுவெளியில் அவமானப்படுத்தக்கூடாது என்று கொந்தளித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்தச் சம்பவத்திற்குத் தன் கோபத்தை பதிவு செய்துள்ளார். மாணவர்களின் மொழித்திறன் குறைபாட்டை சுட்டிக்காட்டலாம், ஆனால் அதை ஒரு அரசியல் மேடையாகவோ அல்லது கிண்டல் செய்யும் கருவியாகவோ பயன்படுத்தக்கூடாது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. முக்கியமாக உங்களுக்கு எல்லாமே ரீல்ஸ் கிடையாது, கன்டென்ட் கிடையாது. உங்கள் அகங்காரத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.. உங்களுக்கு ஆங்கிலம் சரியாக பேச தெரியாத போது.. நீங்கள் எப்படி திமிர்த்தனமாக சிறிய மாணவியை கிண்டல் செய்யலாம் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு சம்பவங்களும் ஆளுங்கட்சிக்குச் சவாலான சூழலை உருவாக்கியிருக்கின்றன. அமைச்சர் சரத்குமாரின் விளக்கம் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் எடுபடும் என்பதும், அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்கு அரசு எந்த மாதிரியான பதில் சொல்லப்போகிறது என்பதும் கேள்வியாக உள்ளது. விஜய்க்கு இந்த விவகாரம் தலைவலி மேல் தலைவலியாக மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications