சிதம்பரம் தீட்சிதர் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை..ஆதாரம் உள்ளது.. மா.சுப்ரமணியன்
சிதம்பரம்: நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறிய தகவலில் உண்மையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இரு விரல் பரிசோதனை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், தீட்சிதர்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக நலத்துறை அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருவிரல் பரிசோதனை நடத்தியதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அவ்வாறு இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ஆளுநர் ஆர்என் ரவி மீண்டும் எழுப்பவே, இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம், பொது தீட்சிதர்கள் குடும்ப சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனையைச் செய்துள்ளனர். இதனை அவர்கள் மருத்துவ அறிக்கையிலேயே தெரிவித்துள்ளனர். சிறுமியின் கன்னித்திரை சேதமடையவில்லை என்று போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இருவிரல் பரிசோதனையை நடத்தியதற்கான ஆதாரமும் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளது. முன்னதாக நான் ஆளுநர் குற்றச்சாட்டிற்கு எதிராகக் கருத்துகளைக் கூறியதாகத் தகவல்கள் பரவின. ஆனால், நான் அப்படி எதுவும் கூறவில்லை. ஆளுநர் கூறியது உண்மை தான். சிறுமிகளுக்குத் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தி நடத்தியுள்ளனர்.
குழந்தைத் திருமணம் நடந்ததாகச் சிறுமி அவர்களின் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை வாங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான அறிக்கையை குழந்தைகள் நல ஆணையம் ஆளுநர் ரவியிடம் கொடுக்கிறது. இதைத்தொடர்ந்து இது தொடர்பான விசாரணை விரிவு படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நாளை முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்வோம். சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என்று தெரிந்தால் அரசு நிச்சயம் சரி செய்யும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் இரு விரல் பரிசோதனை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி ஆடியோவை வெளியிடாமல் உள்ளோம். சுகாதார அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிகார தொனியில் பேசியுள்ளார். அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications