ஆர்கே நகரில் என்னதான் நடக்குது? ஸ்டாலின் களமிறக்கிய ஸ்லீப்பர் செல்கள்!
ஆர்கே நகர் தொகுதியில் திமுகவினரை கண்காணிக்க மு.க.ஸ்டாலின் களமிறக்கிய ஸ்லீப்பர் செல்கள் கட்சியினர் குறித்த அதிர்ச்சி தகவல்களை அறிவாலயத்துக்கு அனுப்பி வருகிறதாம்.
சென்னை: ஆர்கே நகரில் நிஜ நிலவரத்தை கண்காணிக்க மு.க.ஸ்டாலின் தரப்பு ஸ்லீப்பர் செல்களையும் களமிறக்கியுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக எப்படியும் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் திமுகவினர் ஆர்கே நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச் சாவடிகளில் திமுகவின் தேர்தல் பணிகள் இன்னமும் முழுவீச்சில் வேகம் பெறவில்லை. வாக்குப் பதிவுக்கு ஒருவாரம் இருக்கும் நிலையில் திமுகவினரின் இந்த ஆமை வேகம் கட்சி தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.

பல குழுக்கள்
தொகுதிக்குள் தேர்தல் பணிகளுக்கு பல கண்காணிப்புக் குழுக்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அதுவும் எதிரணியினரின் பணப் பட்டுவாடாவை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்க வழக்கறிஞர்கள் குழுக்கள்தான் தீவிரமாக வலம் வருகின்றன.

ஸ்லீப்பர் செல்கள்
இந்த குழுக்கள் அல்லாமல் உண்மையான நிலவரத்தைக் கண்காணிக்க ஸ்லீப்பர் செல்களைப் போல பல உளவு குழுக்களையும் ஸ்டாலின் தரப்பு நியமித்துள்ளதாம். இந்த ஸ்லீப்பர் செல்லைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், ஆர்கே நகர் தொகுதி பிரமுகரை போனில் அழைத்து உங்களை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அலட்சிய நிர்வாகிகள்
அந்த ஆர்கே நகர் தொகுதி பிரமுகரோ, அண்ணே நான் பிசினஸ் விஷயமா வெளியே இருக்கிறேன்.. தொகுதிக்குள் வந்த உடன் உங்களை கூப்பிடுகிறேன் என கூறி லைனை துண்டித்துள்ளாராம்.. அடப்பாவிகளா தேர்தல் வேலையைவிட பிசினஸ்தான் முக்கியம் என கட்சியினரே அலட்சியமாக இருப்பதா? என ஸ்லீப்பர் செல் நிர்வாகி ஸ்டாலின் தரப்பிடம் போட்டுக் கொடுத்ததாம்.

வைட்டமின் ப பிரச்சனை
அதேபோல் தினகரன் தரப்பிடம் விலைபோனதாக சந்தேகிக்கப்படும் தொகுதி நிர்வாகிகளையும் இந்த ஸ்லீப்பர் செல்கள் உன்னிப்பாக கவனித்து அறிவாலயத்துக்கு தகவல்களை தந்து கொண்டிருக்கிறதாம். அதேநேரத்தில் வைட்டமின் ப சப்ளையில் திமுக பின் தங்கியுள்ளதால்தான் இந்த நிலைமை என்பதையும் ஸ்லீப்பர் செல் பட்டவர்த்தனமாக அறிவாலயத்திடம் கூறிவிட்டதாம்.

எல்லாமே கடைசிநேரத்தில்தான்...
ஆனால் அறிவாலயமோ, எல்லா பணத்தையும் இப்போதே இறக்கிவிட்டு அப்புறம் அரவக்குறிச்சி போல ரத்தாகிவிட்டால் என்ன செய்வது? பொறுத்திருக்க சொல்லுங்க...கடைசி நேரத்தில எல்லாமும் வரும் என தகவல் சொல்லிவிடுங்கள் என அசால்ட்டாக பதிலளித்துள்ளதாம். திமுகவின் இந்த வியூகம் எந்த அளவுக்கு கை கொடுக்குமோ என உதறலில் இருக்கின்றனராம் உடன்பிறப்புகள்.


Click it and Unblock the Notifications
