எம்ஜிஆர் முதல் அழகிரி வரை.. திராவிட கட்சிகளை துரத்தும் மெரினா சென்டிமென்ட்.. இனி என்ன நடக்கும்?
மெரினாவில் கட்சி தலைவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டால், அந்த கட்சியில் பெரிய குழப்பம் ஏற்படும் என்ற வரலாறு தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
Recommended Video

சென்னை: மெரினாவில் கட்சி தலைவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டால், அந்த கட்சியில் பெரிய குழப்பம் ஏற்படும் என்ற வரலாறு தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இதோ இப்போது திமுகவில் அந்த பிரச்சனை நிகழ்ந்துள்ளது. திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று மு.க அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அழகிரியின் இந்த பேட்டி அரசியல் உலகில் புயலை கிளப்பி உள்ளது. இது என்ன மாதிரியான குழப்பத்தை திமுகவில் கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

அதிமுக உருவானது
அண்ணா இறந்த பின் திமுக கட்சி கருணாநிதி வசம் சென்றது. கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார். அண்ணாவின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் சில மாதங்களில் திமுக இரண்டாக உடைந்தது. எம்ஜிஆர் திமுக கட்சியில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கினார். அப்போது தொடங்கியது திமுக உடையும் வரலாறு.

அதிமுக உடைந்தது
வரிசையாக தொடர்ச்சியாக ஆட்சி கட்டிலில் அமர்ந்த எம்ஜிஆர், உடல் நலகுறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலும் அண்ணாவிற்கு அருகிலேயே புதைக்கப்படுகிறது. அதேபோல், மெரினாவில் உடல் புதைக்கப்பட்ட சில நாட்களில் அதிமுக கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது. பின் ஜெயலலிதா கட்சியை கைப்பற்றியது வரலாறு.

மீண்டும் உடைந்தது
ஆனால், வரலாறு மீண்டும் தொடர்ந்தது, அதேபோல் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா மரணம் அடைந்தார். சசிகலாதான் பொதுச்செயளாலராக வருவார் என்று கருதப்பட்ட நிலையில், ஓபிஎஸ், சசிகலா அணி என்று அதிமுக மீண்டும் உடைந்தது. பல பிரச்சனைகளுக்கு பின் அதிமுகவில் பல குழப்பமும், பல அதிகாரபூர்வமற்ற அணிகளும் செயல்பட்டு வருகிறது.

திமுகவிற்கும் அதே நிலைமையா ?
இவ்வளவு பெரிய மெரினா வரலாறு தற்போது மீண்டும் சுற்றி சுற்றி திமுகவிடமே வந்து நிற்கிறது. எம்ஜிஆர் சொன்ன, ஜெயலலிதா சொன்ன, ஜானகி சொன்ன, ஓபிஎஸ் சொன்ன அதே ''தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்'' என்ற வாசகத்தை தற்போது அழகிரி சொல்லி இருக்கிறார். இந்த வாசகம் திமுகவை எந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கும் என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.












Click it and Unblock the Notifications