திமுக- அதிமுக மீது மோடி கடும் தாக்கு! ஈழத் தமிழர், மீனவர்கள், மாநில உரிமை பற்றி பேச்சு!!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக திமுக, அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். அத்துடன் தமிழக மீனவர் நலன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர் பிரச்சனை பற்றியும் விரிவாக பேசினார் மோடி.
சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
புத்தாண்டு காணும் தமிழக மக்களுக்கு கடவுள் வரங்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டுகிறேன். தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டதும் இப்போதைய தேர்தலில் நடந்திருக்கும் விந்தை.. நிச்சயமாக மத்தியில் இருக்கும் அரசாங்கம் ஒழிய வேண்டும் - புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அய்யமில்லை

தற்போதைய தேர்தல் நம்பிக்கைக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் மக்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. 10 ஆண்டுகால கொள்ளையர் ஆட்சி நடைபெற்று இருக்கிறது.
கூட்டாட்சிக்கு முக்கியத்துவம்..
இந்த நாட்டில் நிகழ்ந்திருக்கும் ஊழல் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பது மாற்றத்தை மட்டுமல்ல. வரும் நூற்றாண்டில் பாரதம் எப்படி இருக்கப் போகிறது? என்பதற்கான தேர்தல் இது.
கூட்டாட்சி. என்பதுதான் நாட்டின் அடிப்படை தத்துவம். அதனடிப்படையில்தான் மத்திய அரசு அமைய வேண்டும். ஆனால் கூட்டாட்சி தத்துவத்துக்கு நேர் எதிரான அரசு டெல்லியில் இருக்கிறது.
மாநிலங்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு இப்போது இல்லை. நிச்சயமாக மத்தியில் மாநிலங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் அரசு அடுத்து வரும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.
மத்திய அரசு மாநிலங்களை அடிமைகளாக நினைக்கிறது. நான் 4 முறையாக முதல்வராக இருந்திருக்கிறேன். மாநிலங்களை மத்திய அரசு கேவலமாக நடத்துவதை அனுபவித்தவன்.
ஆனால் டெல்லியில் இனி அமையப் போகும் அரசு மாநிலங்களுடன் தோளோடு தோள் கொடுக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஓரணியில் நின்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவோம்.
திமுக- அதிமுக மீது தாக்கு
பாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது தேர்தல் சரித்திரம். நமது கூட்டணி தமிழகத்தில் புதிய வருங்காலத்தை ஏற்படுத்தப் போகிறது
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நடுவே மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். ஒரு கட்சி ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி அமைத்தால் மற்றொரு கட்சியை அழிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
உன்னை நானொழிப்பேன்... நான் உன்னை ஒழிப்பேன் என சிந்திக்கிறார்களே தவிர மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில் திமுக- அதிமுக இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. தமிழகத்தில் 3வது அணி ஆற்றல் மிக்கதாக உருவாகி இருக்கிறது
திமுக- அதிமுகவை பாரதிய ஜனதா தலைமையிலான அணி நடுநடுங்க வைத்துவிட்டது. பழைய தீய விளையாட்டை கைவிடும் நிலைமையை திமுக- அதிமுகவுக்கு பாஜக அணி ஏற்படுத்தியுள்ளது
தமிழக மீனவர் நலன்
இந்திய மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை கொள்ளவில்லை. மீன்பிடித் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மீனவர்கள் வாழ்வில் நிச்சயம் நான் ஒளியேற்றுவேன்
தமிழக மீனவர்களுக்கு இலங்கையினால் அன்றாடம் இன்னல், குஜராத் வாழ் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் துயரம், கேரள மீனவர்களை படுகொலை செய்கிறார்கள் இத்தாலிக்காரர்கள்.
அனைத்து மாநில மீனவர்களுக்கும் நிச்சயம் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்.
மிரட்டும் சிறு நாடுகள்
125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை இப்போது இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மிரட்டுகின்றன. ஆனால் அண்ட நாடுகள் அலறக் கூடிய ஒரு மத்திய அரசு நிச்சயம் மத்தியில் அமையும்.
ஈழத் தமிழர்கள்..
உலகின் பல நாடுகளில் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இலங்கை, மொரிஷீயஸ்,பிஜி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வம்சாவளியினர் வாழ்கின்றனர்..
வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு ஒரே தாய் பாரதம் மட்டும். வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினரின் பாஸ்போர்ட் வண்ணங்கள் மாறலாம்- ஆனால் அவர்களது ரத்தம் நமது ரத்தம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் துயரத்தை நிச்சயமாக புதிய அரசு துடைத்துவிடும். மலேசியா, இலங்கை, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை, நலனில் அக்கறை கொள்வோம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே.
டெல்லியில் சோனியாவுக்கு பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. நிர்பயா என்ற குழந்தையை எப்படி என்ன செய்தார்கள் என்பதை அறிவோம்.
நிர்பயா விவகாரத்தில் அலட்சியமாக இருக்கும் மத்திய அரசு தேவையில்லை என வெகுண்டெழுந்தனர். மக்களின் கோபத்தில் அச்சப்பட்டுதானே ரூ1000 கோடியில் நிர்பையா திட்டம் உருவானது.
ஆனால் நிர்பயா நிதியில் ரூ1 கூட செலவழிக்கவில்லை.. ஏன் மிஸ்டர் மறுவாக்கு அமைச்சர் ப.சிதம்பரம்.?
சியாச்சின்..
சியாச்சினை விட்டுக் கொடுக்கப் போவதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகின்றன.. இதை நான் விமர்சனமாக குற்றச்சாட்ட கேட்கவில்லை.. நாட்டின் பிரதமர் இதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
கூட்டணி வேட்பாளர்கள்..
முன்னதாக இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை மோடி அறிமுகம் செய்து வைத்தார். வழக்கம் போல தமிழில் வணக்கம் கூறி பேசினார்.












Click it and Unblock the Notifications