தமிழகத்தில் நரேந்திரமோடி நாளை முதல் 2 நாள் பிரசாரம்: கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!!
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் 5 இடங்களில் நடைபெறும் பிரசாரக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடியின் கூட்டங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஞாயிறன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

கிருஷ்ணகிரியில் பிரசாரம்
மீண்டும் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு நாளை நரேந்திரமோடி வருகிறார். பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை வரும் அவர் நேராக மாலை 3.30 மணிக்கு கிருஷ்ணகிரி செல்கிறார். அங்கு ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ‘ஹெலிபேடு' அமைக்கப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
பின்னர் 4 மணிக்கு காந்திகுப்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கலந்துகொண்டு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்கிறார்.

விஜயகாந்த் பங்கேற்பு
அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் செல்லும் அவர் அங்குள்ள வித்யாமந்திர் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கலந்துகொண்டு பேசுகிறார்.

கோவையில் பிரசாரம்
பின்னர் அங்கிருந்து கோவைக்கு மாலை 6.30 மணிக்கு செல்லும் நரேந்திரமோடி, இரவு 7.15 மணிக்கு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் இரவு அங்குள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலில் நரேந்திரமோடி தங்குகிறார்.

ராமநாதபுரம் பிரசாரம்
ஏப்ரல் 17ம் தேதி காலை கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் நரேந்திரமோடி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் செல்கிறார். 10.30 மணிக்கு அங்குள்ள டி-பிளாக் பொதுக்கூட்ட மைதானத்தில் பேசுகிறார்

வைகோ பங்கேற்பு
அங்கிருந்து புறப்படும் நரேந்திரமோடி ஈரோடு வருகிறார். அங்குள்ள ஏ.ஐ.டி. பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதே கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கலந்துகொண்டு பேசுகிறார்.

குஜராத் பயணம்
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் திரும்பும் நரேந்திரமோடி அன்று மாலை விமானம் மூலம் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

ஆறு, ஐந்தானது
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகத்தில் 2 நாள் பிரசாரம் செய்யும்போது, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி ரத்து
தற்போது கன்னியாகுமரி தொகுதி செல்லும் நரேந்திரமோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications