தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தை அவசரமாக அமல்படுத்துவதா? மத்திய அரசுக்கு ஜெ. கண்டனம்

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக, திருத்தியமைக்கப்பட்ட தேசிய பயிர் காப்பீட்டு திட்டம் எனவும், பருவநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் எனவும் மத்திய அரசு புதிய தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனை நடத்தாமல், எதிர்பாராத வகையில் திடீரென்று அறிமுகப்படுத்தி இருப்பது, விவசாயிகள் மத்தியில் திடுக்கிடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் திட்டம்
வேளாண் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கு மேலாக மத்திய அரசு பயிர் இழப்பீட்டு தொகையில் 50% அளிக்கும் நிலையில், தமிழகத்தைச்சேர்ந்த விவசாயிகளுக்கு 45 முதல் 50% பிரிமியம் தொகையை மானியமாக, மாநில அரசு வழங்கி வரும் நிலையில், மத்திய அரசின் திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம், குறிப்பாக தமிழகத்திற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான பிரிமியம் தொகை வெகுவாக உயர்ந்திருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும் என்றும், எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த மனவேதனையுடன் எழுதுகிறேன். பருவநிலை பாதிக்கப்படும்போது, லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது சிரமங்களை எதிர்கொள்வதற்கு உள்ள ஒரே திட்டமாக பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளது.
எனவே, தமது தலைமையிலான அரசு, பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அவர்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகையில் 45 முதல் 50 சதவீதம் வரை அளவு தொகையை மானியமாக தமிழக அரசு அளித்து வருகிறது. இதன் விளைவாக, தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், கடந்த 2000-2001-ம் ஆண்டு, ஒரு லட்சத்து ஆயிரம் விவசாயிகள் காப்பீடு செய்திருந்த நிலை மாறி, 2012-2013-ம் ஆண்டில், 9 லட்சத்து 76 ஆயிரம் விவசாயிகளாக அதிகரித்துள்ளது.
தேசிய பயிர்காப்பீட்டு திட்டமானது அதனுடன் தொடர்புடைய மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், அவசர, அவசரமாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதையும் தாம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2013-2014-ம் ஆண்டு ரபி பருவம் தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகு, அதாவது, 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியிலிருந்தே மத்திய அரசு தேசிய பயிர்காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நிர்வாக அறிவுறுத்தல்களை வெளியிட்டது.
விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை
இந்த காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தியபோது, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை. தேசிய பயிர்காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகளுக்கான பிரிமியம் தொகை அதிகரித்துள்ளதோடு, தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு வகையான சுமை ஏற்பட்டுள்ளது. பயிர் மற்றும் பருவகாலத்தை பொறுத்து, காப்பீடு செய்யப்படும் தொகையில் 2 முதல் 3.5 சதவீத பிரிமியம் தொகை அளிப்பதையே, தேசிய வேளாண் காப்பீட்டு திட்ட விதிமுறைகள் உறுதிசெய்கின்றன.
விவசாயிகள், காப்பீடு செய்யப்படும் தொகையில், 50 சதவீத பிரிமியம் தொகையை தமிழக அரசு மானியமாக வழங்குவதால், அவர்கள் எஞ்சிய 1 சதவீதம் முதல் 1.75 சதவீதம் பிரிமியம் தொகையை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், புதிய தேசிய பயிர்காப்பீட்டு திட்டத்தின்படி, விவசாயிகள் 3.75 சதவீதம் முதல் 4.8 சதவீதம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின்படி அதற்கு மேலும் பிரிமியம் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிக பிரிமியம் தொகை செலுத்த வேண்டி வருமானால், ஏற்கனவே பருவ நிலை ஆபத்து உள்ள சூழ்நிலையில் பயிர் காப்பீட்டினை விவசாயிகள் மேற்கொள்வார்களா? என நான் சந்தேகிக்கிறேன்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்துள்ளதாலும், 2012-13-ம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவியதாலும் ஏற்கனவே கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. தமிழக விவசாயிகள், இதுபோன்ற கூடுதல் காப்பீட்டு பிரிமியம் சுமையால், மேலும் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த சூழ்நிலையில், பயிர் காப்பீட்டு திட்ட பிரிமியம் தொகை உயர்வை தமது அரசு ஏற்றுக்கொள்ளாது. எனவே, தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் தொகைக்கான பிரிமியம் தொகை, 2 சதவீதம் அல்லது அதற்குமேல் கூடுதலாகும் போது, அந்த சுமையை விவசாயிகளின் மீது சுமத்தாமல், மத்திய அரசும், மாநில அரசும் சமமாக பகிர்ந்து செலுத்தலாம் என தாம் யோசனை தெரிவிக்கிறேன்.
இதன்மூலம், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் அதிக அளவிலான விவசாயிகளை ஊக்குவிக்க வழிவகை ஏற்படும் மேலும், நீண்டகால அடிப்படையில் வேளாண் செயல்பாடுகளை விவசாயிகள் தொடர்வதற்கும், பயிர் இழப்பீட்டை அவர்கள் எதிர்கொள்வதற்கும் இது ஏதுவாகும்.
எனவே, நடப்பு 2013-14-ம் ஆண்டு ரபி பருவத்தில் இருந்தே, தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான பிரிமியம் தொகையில், அதிகரிக்கப்பட்டுள்ள 2 சதவீதத்திற்கு மேற்பட்ட பிரிமியம் தொகையை மத்திய-மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தமது யோசனை குறித்து, பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications