வட்டியில்லா கடன் தருவதாக கூறி பண மோசடி: ''டுபாக்கூர்'' அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது
சென்னை: வட்டியில்லாமல் கடன் பெற்றுத்தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் 10000 பேரிடம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரின் அப்ரோ யேசுதாஸை சென்னை கொளத்தூரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்து உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் பெயரை விதிமுறைகளுக்குப் புறம்பாக பயன்படுத்தி விளம்பரம் செய்து, நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக அப்ரோ யேசுதாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டு, அதில் அப்ரோ நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்தியது.
குறைந்த வட்டியில் மகளிர் சுயவுதவிக் குழுக்களுக்கு கடன் தருவதாகக் கூறி பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக அப்ரோ யேசுதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு பெண்களுக்கு கடன் உதவி தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அப்ரோ நிறுவன நிர்வாகிகள் சிலர் மட்டுமே சிக்கினர்.

அப்ரோ நிறுவனர் யேசுதாஸ் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு பெங்களூரு சென்ற சென்னை போலீசார் அப்ரோ யேசுதாஸை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்ரோ நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி தேவியும் கைது செய்யப்பட்டார். யேசுதாசையும், தேவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில மாதங்களிலேயே இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனைத் தொடர்ந்து யேசுதாஸ் அப்ரோ என்ற அரசியல் கட்சியை துவங்கினார்.
இந்த கட்சியின் சார்பில் 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி தேவியை கைது செய்தனர். யேசுதாஸ் அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்தார்.
சில மாதங்களிலேயே ஜாமீனில் வெளிவந்த அப்ரோ யேசுதாஸ், சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் வட்டியில்லாமல் கடன் பெற்றுத்தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் 10000 பேரிடம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரின் அப்ரோ யேசுதாஸை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications
