முத்துக்குமாரசாமி தற்கொலையால் வெடித்த போராட்டங்கள்... பணிந்த அரசு
சென்னை: நேர்மையான அரசு அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது ஜாதிரீதியான போராட்டங்களும் வெடிக்கவே தற்போது வேறு வழியின்றி இந்த தற்கொலைக்கு சூத்திரதாரியாக கருதப்படும் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரி தற்கொலை செய்து கொண்டது முதல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது வரை நடந்தது என்ன ஒரு சின்ன ப்ளாஷ் பேக் படியுங்களேன்.

வேளாண்மைத் துறையில் தற்காலிக டிரைவர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடக்க இருப்பதை அறிந்த உள்ளூர் கட்சிக்காரர்கள் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஆட்களை நிரப்ப திட்டமிட்டனர். இரண்டு மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு தலா இரண்டு ஸீட் என முடிவு செய்து கொண்டார்கள். மேலும் மூன்று பேர் தலா ஒரு ஸீட் கேட்டார்கள். ஆனால், சென்னையில் இருப்பவர்கள் அவர்களாக நியமிக்க நினைத்தார்கள். அதன் பிறகு இவர்களுக்குள் மோதல் வந்தது. பின்னர் சமாதானம் ஆனதாம்.
இவர்களுக்கு பணத்தைப் பிரித்துக்கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், அதிகாரி முத்துக்குமாரசாமி எல்லோரையும் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்து நியமனம் செய்தார்.
இதற்கு சென்னையில் இருந்து மட்டும் அல்லாமல் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களும் அவரை அடிக்கடி கூப்பிட்டு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள். கடைசியாக அவர் ரயில் முன் பாய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்புகூட அந்தப் பகுதியில் வசிக்கும் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில்தான் பஞ்சாயத்து நடந்துள்ளதாம். இதுவே தற்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது வரை சென்றுள்ளதாம்.
அதிகாரி முத்துக்குமாரசாமி
பாளைங்கோட்டை திருமால் நகரைச் சேர்ந்தவர் எஸ்.முத்துக்குமாரசாமி (57). திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
ரயில் முன் பாய்ந்து
கடந்த 20 ஆம் தேதி திருநெல்வேலி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் ரயில் முன் பாய்ந்து முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தற்கொலையின் பின்னணி
வேளாண்மை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முத்து குமாரசாமிக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும், பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கடி
அதிகாரியின் தற்கொலைக்குக் காரணம் அப்போதைய அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்திதான் என்றும் அவரது பதவியை பறித்து கைது செய்யவேண்டும் என்றும் அனைத்து எதிர்கட்சியினரும் நெருக்கடி கொடுத்தனர். போராட்டங்களும் வெடித்தன.
பதவி பறிப்பு
இதன் எதிரொலியாக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பான உண்மை விவரங்களை கண்டறிய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை
இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி அன்பு தலைமையில் திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி பொன்னுதுரை, இன்ஸ் பெக்டர்கள் பிறைசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.
உண்ணாவிரதம்
எனினும் அதிகாரி தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாது தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் கடந்தவாரம் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த வழக்கினை சி.பி.ஐக்கு மாற்றவேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது.
நேர்மையான அதிகாரிகளுக்கு மிரட்டல்
இதனிடையே இந்த போராட்டத்தை தீவிரப்படுத்திய ஆம் ஆத்மி கட்சியினர், இது முத்துக்குமாரசாமியை பற்றிய போராட்டம் மட்டுமல்ல. இந்தநிலை பல நேர்மையான அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நேர்மையான அரசு அதிகாரிகள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கு உள்ளாகும் நேர்மையான அதிகாரிகள் எங்களை நாடலாம். அந்த நேர்மையான அதிகாரிகளுக்காக போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே முத்துக்குமாரசாமி வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழகம் முழுவதும் வருகிற 8ஆம்தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சம்மன்
போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார், முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
அக்ரியிடம் விசாரணை
இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி வந்தார். வேளாண் பொறியாளர், முத்துகுமாரசாமி தற்கொலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.
அதிரடி கைது
ஓட்டுநர்கள் பணி நியமனம் தொடர்பாக, செயற்பொறியாளர் முத்துகுமாரசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து அதிகாலை 5 மணிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். நேர்மையான அதிகாரியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி வெடித்த போராட்டங்களுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்து சற்றே நிவாரணம் அளித்துள்ளது அரசு.












Click it and Unblock the Notifications