திமுகவில் அண்ணன், தம்பி சண்டை உச்சத்தை எட்டி விட்டது.. நெப்போலியன் தாக்கு
சென்னை: திமுகவில் அண்ணன் தம்பி சண்டை உச்சத்தை எட்டி விட்டது. அங்கு திமுகவினர் குழம்பிப் போயுள்ளனர் என்று முன்னாள் திமுக மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் நெப்போலியன். இந்த நிலையில் இன்று சென்னையில் அவரது ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில ரசிகர் மன்ற செயலாளர் மாந்துறை ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் எஸ்.வி.எம். சரவணன், ராஜா கலந்து கொண்டனர். அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நெப்போலியன் பேசுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் வித்தியாசமான முயற்சி, தொலைநோக்கு திட்டங்கள், தூய்மை இந்தியா திட்டம் இவை எல்லாம் என்னை கவர்ந்தது. அதனால்தான் நான் திமுகவில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தேன். ஏற்கனவே திமுகவில் இருந்து என்னை ஓரம்கட்டி வைத்திருந்தனர். அங்கு எனக்கு மதிப்பில்லை. எனக்கு முக்கியத்துவம் தரவில்லை.
அதனால் கடும் மன உளைச்சலில் இருந்தேன். இப்போது பாஜகவில் இணைந்திருப்பது மன திருப்தி அளிக்கிறது. எனது ரசிகர்கள், ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரையும் பாஜகவில் இணைத்து இருக்கிறேன். எனது ரசிகர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பேன்.
திமுகவில் இப்போது அண்ணன்-தம்பி சண்டை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அங்கு திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். பாஜகவில் உறுப்பினர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் கட்சி பணியாற்றி வருகின்றனர். நான் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இணைந்துள்ளேன். பதவி, அதிகாரங்களை மேலிடம் விரும்பி தந்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் நெப்போலியன்.
இக்கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சி அகில இந்தியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளபடி, தமிழகம் முழுவதும் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த மாவட்டந்தோறும் கிளைக் கழகம் வரை தீவிரமாக உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், மன்றப் பணிகளை வரும் காலங்களில் தீவிரப்படுத்தி, விரிவாக்கவும், துடிப்புடன் செயல்படுத்தவும் கடுமையாக உழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் நடவடிக்கைகளில் கடுமையாக உழைக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும், பல்வேறு மாநிலங்களில் தொடர் வெற்றியை பாரதீய ஜனதா கட்சிக்கு தந்து கொண்டிருக்கும் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவுக்கும், நெப்போலியனை பாரதீய ஜனதாவில் இணைக்கும் நிகழ்ச்சியில் பாராட்டிய பா.ஜ.க.வின் அனைத்து நிர்வாகிகளுக்கும் ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications