பிராட்வே பஸ் நிலையத்தில் நரிக்குறவர் குழந்தை கடத்தல்: திருநங்கைகள் 3 பேர் கைது
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசிப்பவர் விஜய் (வயது 32). நரிக்குறவரான இவர் பாசி போன்ற பொருட்களை பாரிமுனை பகுதியில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பெயர் வஜா (30). இவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை.
சென்னை மண்ணடி ரேவு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் முத்தழகு (24), சக்திநாயகி (32), பிரியா (19) ஆகியோர் தினமும் பிராட்வே பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளுக்கு ஆசி வழங்கி பணம் வசூலிப்பார்கள்.
அப்போது நரிக்குறவ தம்பதிகளான விஜய், வஜாவிடம் பழக்கம் ஏற்பட்டது. விஜயின் ஆண் குழந்தையை திருநங்கைகள் 3 பேரும் மடியில் வைத்து விளையாடி கொஞ்சி மகிழ்வது வழக்கம். குழந்தையை தங்களுக்கு தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் விஜய் கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு விஜயை அழைத்து சென்று திருநங்கைகள் 3 பேரும் மது வாங்கி கொடுத்துள்ளனர். மது மயக்கத்தில் பிராட்வே பஸ் நிலையத்தில் விஜய் அசந்து தூங்கிவிட்டார். அவரது மனைவியும் அசந்து உறங்கி விட்டார்.
அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 3 பேரும் நள்ளிரவில் நரிக்குறவர் விஜயின் ஆண் குழந்தையை கடத்தி சென்றுவிட்டனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் விஜய் விழித்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தையை திருநங்கைகள் தான் கடத்தி சென்றிருக்கவேண்டும் என்று விஜய் முடிவு செய்தார். உடனடியாக சட்டக்கல்லூரி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சட்டக்கல்லூரி போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று பகல் முழுவதும் தேடினர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை.
திருநங்கைகளும் அவர்களுடைய வீட்டில் இல்லை. இரவு 8 மணி அளவில் திருநங்கைகளின் வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்தபோது அவர்கள் அங்கு குழந்தையுடன் இருப்பதை கண்டுபிடித்தனர். போலீசை பார்த்த உடன் குழந்தையுடன் திருநங்கைகள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் போலீசாரும் பின்னாலேயே விரட்டிச்சென்று திருநங்கைகள் 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் நரிக்குறவர் தம்பதியரிடம் குழந்தையை பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர்.
குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதியர், நாங்கள் வறுமையில் இருந்தாலும் குழந்தையை நாங்கள் யாருக்கும் தானமாக கொடுக்கமாட்டோம். அவனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவோம் என்று கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர்.
திருநங்கைகள் 3 பேரும் குழந்தையை விற்பதற்காக கடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் 3 பேரும் குழந்தையை வளர்ப்பதற்காகத்தான் தூக்கிச்சென்றோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர், திருநங்கைகள் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications