மறு தேர்வு வினாத்தாளும் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நீட் தேர்வு ரத்தால் பெற்றோர்கள் கொதிப்பு
சென்னை: கேள்வித் தாள் கசிந்ததாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது மாணவ - மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்காக இரவும் பகலும் கண்விழித்து ஆண்டுக்கணக்காக மாணவர்கள் கண்ட கனவு நொடியில் தகர்ந்து இருப்பது பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மறு தேர்வு வினாத்தாளும் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்காக நம் நாட்டில் நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த நீட் தேர்வு, இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாகும். நீட் தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளும், குளறுபடிகளும் தொடர்கதையாக உள்ளன.

நீட் தேர்வு ரத்து
இந்த ஆண்டு கடந்த மே மாதம் 3ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக பல மாதங்களாக தீவிரமாக படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், மறுதேர்வு விரைவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளின் உழைப்பு எல்லாம்..
நீட் தேர்வுக்காக இரவும் பகலும் கண்விழித்து ஆண்டுக்கணக்காக மாணவர்கள் கண்ட கனவு நொடியில் தகர்ந்து இருப்பது பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நீட் தேர்வு ரத்தானது பற்றி தனது மனவேதனையை வெளிப்படுத்திய பெற்றோர் ஒருவர் கூறும்போது, "என் மகள் கடந்த மூன்று ஆண்டுகளாக 10x10 அறையில் தினமும் 14 மணி நேரம் படித்து வருகிறாள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையாக உழைத்தாள். அவளின் பயிற்சிக்காக எங்கள் சேமிப்புகளையே செலவிட்டோம். ஆனால் கடைசியில் இப்படி நடந்துவிட்டது. ஒரு கேள்வித்தாள் கவரையே பாதுகாக்க முடியாத அமைச்சகத்தின் தவறால், அவளின் உழைப்பு எல்லாம் அர்த்தமற்றதாகிவிட்டது என்று நான் எப்படி அவளிடம் சென்று சொல்வது? மருத்துவராக வேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்கள் இவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள்" என்றார்.
கேள்வித்தாள் கசியாது என உத்தரவாதம் தர முடியுமா?
அதேபோல், சுனிதா என்ற பெண் கூறுகையில், "என் மகன் நீட் தேர்வு எழுதியிருந்தான். தற்போது வினாத்தாள் கசிவு புகாரில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வையே முறையாக நடத்த முடியவில்லை என்றால், என்.டி.ஏ. அமைப்பையே கலைத்து விட வேண்டும். இது வெறும் பணம் பற்றிய விஷயம் மட்டும் அல்ல.
எங்கள் குழந்தைகளின் மனநலத்தை பற்றியது. அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும், மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் இப்போது மீண்டும் அதே புத்தகங்களை எடுத்து, அதே பாடத்திட்டத்தை நம்பிக்கையில்லாமல் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மறுதேர்வின் கேள்வித்தாளும் கசிந்து விடாது என்று யார் உத்தரவாதம் தர முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.














Click it and Unblock the Notifications