தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு! விடைபெறும் 46 ஆண்டுகால பழைய பஸ் நிலையம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளியில் ரூ.39.14 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படுகிறது. 46 ஆண்டுகளாக பரபரப்பாக செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம், இதன் மூலம் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது.
தருமபுரி நகரின் மையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையம், சுமார் 5.75 ஏக்கர் பரப்பளவில் 1978-ல் தொடங்கப்பட்டது.

இப்பணிகள் 1980-ல் நிறைவடைந்து, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கிருந்து ஒசூர், சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சென்னை, வேலூர், பெங்களூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நகர மக்கள்தொகை பெருக்கம், போதிய வசதியின்மை மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பழைய பேருந்து நிலையத்தை மாற்றி புதிதாக கட்டப்படும் என நகராட்சி நிர்வாகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, 2017-ல் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், புதிய பேருந்து நிலையம் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு நிதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பின்னர், தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில், 10 ஏக்கர் தனியார் நிலம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நகராட்சி வசம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், மண் பரிசோதனை, கட்டட வரைபட அனுமதி, நகராட்சி ஒப்புதல் போன்ற நடைமுறைகளுக்குப் பிறகு, ரூ.39.14 கோடியில் அரசு-தனியார் பங்களிப்புடன் புதிய புறநகர் பேருந்து நிலையப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தயாரான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று இதைத் திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும் புதிய நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். 46 ஆண்டுகளாக பல்வேறு நகரங்களுக்குப் பேருந்துகளை இயக்கி வந்த பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையம், இதன் மூலம் பயன்பாட்டிலிருந்து விடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications