கேஸ் நேரடி மானியத்திட்டத்தில் சேரலையா? சிலிண்டர் கட்! நுகர்வோர் கொதிப்பு
சென்னை: ஹலோ இண்டேன் கேஸ் ஏஜென்சியா? சிலிண்டர் பதிவு பண்ணி 1 மாசம் ஆச்சே இன்னும் வரலையே... என்று கேட்டால் அங்கிருந்து வரும் பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.
நீங்க நேரடி மானியத்திட்டத்திற்கு விண்ணப்பம் கொடுத்துட்டீங்களா? கொடுக்கலைன்னா உங்களுக்கு சிலிண்டர் வராதுங்க என்பதுதான் அந்த பதில்.
ஆதார் கார்டு வாங்க லைன்ல நிக்கணுமே என்று யோசிக்க வேண்டாம். வங்கிக் கணக்கு இருந்தால் உடனே திட்டத்தில் சேருங்க, சிலிண்டர் கொடுக்கிறோம் என்கின்றனர் எல்.பி.ஜி சமையல் எரிவாயு முகவர்கள். இன்றைக்கு நேரடி மானியத்திட்டத்தில் சேராத பெரும்பாலான இல்லத்தரசிகளின் பிரச்சினை இதுவாகத்தான் இருக்கிறது.

நேரடி மானியத்திட்டம்
சமையல் எரிவாயு மானியம், 2015 ஜனவரி 1ஆம் தேதி முதல், வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்; கேஸ் சிலிண்டரை, சந்தை விலைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கை, எண்ணெய் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும் என, அறிவிப்பு வெளியானது.

வங்கிக் கணக்கில் பணம்
இதை தொடர்ந்து, மொத்த சமையல் கேஸ் வாடிக்கையாளர்களில், 65 முதல் 70 சதவீதம் பேர், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, பதிவு செய்துள்ளனர். ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின் சிலிண்டர் வாங்குவோருக்கு, வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்படுகிறது.

சிலிண்டர் கட்
அதே நேரத்தில், சமையல் கேஸ் மானியம் பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் துண்டித்து உள்ளன; இதனால், நுகர்வோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

பதிவு செய்ய முடியவில்லை
'சமையல் எரிவாயு சிலிண்டர் கேட்டு, பதிவு செய்ய, தானியங்கி சேவையை தொடர்பு கொள்ளும்போது, கேஸ் சிலிண்டர் வேண்டும் கோரிக்கை பதிவாகாமல், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை, கேஸ் முகமையிடம் உடனடியாக அளிக்க வேண்டும்' என, தகவல் சொல்வதாக, நுகர்வோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

முகவர்களுக்கும் கட்
மானியம் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்காத, நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காஸ் முகமைகளுக்கு, சிலிண்டர் சப்ளையை, எண்ணெய் நிறுவனங்களே நிறுத்தி உள்ளதாக கேஸ் முகவர்கள் தரப்பில் கூறுப்படுகிறது.

நினைவூட்டல்கள்
மானியம் பெற வங்கிக் கணக்குஅளிக்காதவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் 'வாய்ஸ் கால்' மூலம், மானியம் பெறுவதற்கான ஆவணங்களை அளிக்க நினைவூட்டுகிறோம். பெரும்பாலான நுகர்வோர், 'ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு இல்லை' என, கூறுகின்றனர். கேஸ் மானியம் பெறுவதற்காக, வங்கிக் கணக்கு துவங்க, வங்கிகள் முன் வருவதில்லை என்றும் கூறுகின்றனர். இதனால், அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை, மானியம் அளிப்பதற்காக இணைக்க முடியவில்லை என்கின்றனர் முகவர்கள்.

சட்டப்படி சரியா?
கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு, எண்ணெய் நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கும் ஒப்பந்தம் உள்ளது. ஒரு சிலிண்டர் அல்லது கூடுதல் சிலிண்டர் வைத்திருப்பவர்கள், அதற்கேற்ப வைப்புத்தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி உள்ளனர். இந்நிலையில், மானியத்தொகை பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்கவில்லை என்பதற்காக, எரிவாயு சிலிண்டர் சப்ளையை நுகர்வோருக்கு நிறுத்துவது, சட்டப்படி தவறான செயல்.நுகர்வோர் ஒருவர், மானியம் பெற விரும்பவில்லை என்றால், அவருக்கு சந்தை விலையில், சிலிண்டரை சப்ளை செய்ய வேண்டும். ஆனால், சிலிண்டரே அளிக்க மாட்டோம் என, எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என்கின்றனர் நுகர்வோர்கள்.

மார்ச் 31 வரை கெடு
சென்னை போன்ற நகரங்களில், 60 சதவீதம் பேர் தான், ஆதார் அட்டை பெற பதிவு செய்துள்ளனர்; மேலும், பலருக்குவங்கிக் கணக்கு இல்லை. வங்கிக் கணக்கு துவங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது; சேவை பகுதியை சுட்டிக்காட்டி, பல வங்கிகள், புதிய வங்கிக் கணக்குகளை துவக்க மறுக்கின்றன.இந்நிலையில், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை அளிப்பதற்கு, நுகர்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், மானியம் பெறுவதற்கு, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் அளிக்க, மார்ச் 31ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசமும், அளிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் முதல் கட்
'மானியம் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்காதவர்களுக்கு, ஜூன் மாதத்துக்கு பின்தான், மானிய சிலிண்டர் அளிப்பது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதமே, சிலிண்டர் இல்லை என சொல்வது, முறையற்ற செயல் என்பதும் நுகர்வோர்களின் கருத்தாகும்.

கேசரி கிண்ட முடியாதே
சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவது எப்படி என்று விதம் விதமாக விளம்பரம் செய்யப்படுகிறது. சமையல் அறையில் கேசரி செய்து கொண்டே விளக்கம் கொடுக்கிறார் ஒரு பெண்மணி ஆனால் இப்படி திடீரென்று சிலிண்டரை நிறுத்திவிட்டால் நாங்கள் எப்படி கேசரி செய்வது என்கின்றனர் நுகர்வோர்கள்.

வேண்டாம் என்றாலும்
சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என்றாலும் அது குறித்த விண்ணப்பத்தையாவது கொடுக்கவேண்டும் என்று முகவர்கள் கேட்கின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வேண்டும் என்றால் நேரடி மானியத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் அல்லது மானியத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்ற விண்ணப்படிவம் ஏதாவது ஒன்றை அளிப்பது அவசியம் என்றும் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

பயனாளிகளுக்குப் பயன்
சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஒதுக்கி இதை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கே நேரடியாகக் கொடுத்து வந்தது. ஆனால் சமையல் எரிவாயுவுக்கு கொடுக்கப்படும் மானியம் நேரடியாக பயனாளிகளுக்கே சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நேரடி மானிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சந்தை விலையில் சமையல் எரிவாயுவை வாங்கிக் கொள்ள இந்த மானியத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நான்கு வகை விண்ணப்பட்
சமையல் எரிவாயு முகவர்கள் மற்றும் வங்கிகள் மூலமாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நான்கு வகையான விண்ணப்பப்படிவங்கள் உள்ளன. எரிவாயு முகவர்கள் மூலமாக விண்ணப்பம் செய்யும்போது படிவம் 1 அல்லது 3 இதில் ஏதாவது ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வங்கி மூலமாக விண்ணப்பம் செய்பவர்கள் படிவம் 2 அல்லது 4 இதில் ஏதாவது ஒன்றின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இலவசம்தான்
சில முகவர்கள் வங்கி மூலமாக செய்கிற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து வங்கிகளிடத்தில் கொடுக்கும் ஏற்பாட்டையும் செய்கின்றனர். இதற்கு என்று தனியாக இணையதளம் உள்ளது. அதன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் வாங்குவதற்கு அல்லது விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் கிடையாது. இணையதள முகவரி: http://petroleum.nic.in/dbt/index.php

இவங்களுக்கு கிடைக்காது
தற்போது மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்கிக் கொண் டிருக்கும் அனைவரும் இந்த நேரடி மானிய திட்டத்தில் பயன் பெறலாம். இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் பெயரில் உள்ள வங்கிகணக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எரிவாயு இணைப்பு ஒரு பெயரிலும், வங்கிக்கணக்கு வேறொரு பெயரிலும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எரிவாயு இணைப்பு வாங்கிய நபர் உயிருடன் இல்லை என்றால் அவரது வாரிசுகள் நேரடியாக இந்த மானியத்தை பெற முடியாது. எரிவாயு இணைப்பை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகே தகுதி பெறுவார்கள். எனவே முதலில் பெயர் மாற்ற வேலைகள் செய்துவிட்டுதான் விண்ணப்பிக்க முடியுமாம்.












Click it and Unblock the Notifications