ஆளுநர் இனியும் அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம்- ஸ்டாலின்
ஆளுநர் நீண்ட அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம் மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்திற்கே உலைவைக்கும் கேலிக்கூத்து என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், உள்துறை அமைச்சகமும் செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை :
முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான 'குதிரை பேர' அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல் உலகத்திற்குத் தெரிய வந்துவிட்டது.

கேலிக்கூத்து
ஆனால், "அது உள்கட்சி பிரச்சினை", என்று கூறி, இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு அரசியல் உள்நோக்கத்துடன் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாண்புமிகு ஆளுநர் நீண்ட அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம் மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்திற்கே உலைவைக்கும் கேலிக்கூத்தாகும்.

சட்ட விரோத அரசு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், சட்டமன்றத்தில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பிலும், ஏற்கனவே ஆளுநர் அவர்களுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டும், இன்றுவரை திரு. எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிடாமல் இருப்பது, ஒரு சட்டவிரோத அரசு தமிழகத்தில் நடப்பதற்கு முழு ஆதரவு அளிக்கும் விதத்தில் அமைந்து விட்டது.

குரல்வளையை நெறிப்பதா?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் சார்பிலும், மேதகு குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து, "பெரும்பான்மையை நிரூபிக்க இந்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்", என்று கோரிக்கை வைத்த பிறகும், பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், உள்துறை அமைச்சகமும் செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.

பெரும்பான்மை இல்லை
இதற்கிடையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நேற்றைய தினம் கூட்டியிருக்கிறார். அதில் 109 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றார்கள் என்ற செய்தி அனைத்துப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்துள்ளது. இதன்மூலம், பெரும்பான்மைக்குத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் இந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிய வந்திருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு. புகழேந்தி அவர்கள் தொடுத்த வழக்கில், நேற்றைய தினம் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், "அதிமுகவில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சரை ஆதரிக்க வேண்டியதில்லை. சிலர் ஆதரவு தெரிவிக்காமல் இருக்கலாம்", என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

ஹைகோர்ட் முன்பு ஒப்புதல்
திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஏற்கனவே ஆதரவளித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இப்போது இல்லை என்பதும், இதன்மூலம் சட்டமன்றத்தில் இந்த அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆளுநர் உத்தரவிடுவாரா?
மிக முக்கியமான அரசியல் சட்ட வழக்கில் அரசின் தலைமை வழக்கறிஞரே உயர்நீதிமன்றத்தின் முன்பு கூறிய இந்தக் கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே, திரு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது உயர்நீதிமன்றத்தின் முன்பே தெளிவாக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தன் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சட்ட விரோத செயல்
இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஊழல் கொள்ளை கூட்டணி
ஆகவே, பெரும்பான்மையை இழந்த இந்த அரசின் சட்டவிரோதமான முடிவுகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எக்காரணத்தைக் கொண்டும் துணை போகக்கூடாது என்றும், மைனாரிட்டி நிலைக்குச் சுருங்கிவிட்ட ‘குதிரை பேர' அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் - கொள்ளை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்திடக் கூடாதென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications