இந்தியாவில் 40, ஆந்திரா, குஜராத்தில் 30, கர்நாடகத்தில் 25 தமிழகத்தில் 14 தான்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: இந்தியாவில் சிசு இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 40ஆக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த விகிதம் 21ஆகக் குறைந்துள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சிசு மரணம் தமிழ்நாட்டில் குறைவுதான் என்றும், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு அரசு காரணம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புள்ளிவிபரங்களுடன் கூறியுள்ளார்.
எந்த ஒரு விசயம் என்றாலும் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு புள்ளிவிபரம் சொல்வதில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியையே மிஞ்சும் அளவிற்கு புள்ளிவிபர புலிகளாக முன்னேறியுள்ளனர் நமது அமைச்சர்கள்.

தர்மபுரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறந்தது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் திமுக உறுப்பினர் செங்குட்டுவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டெல்லிபாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் பிரின்ஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கணேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
அமைச்சரின் புள்ளிவிபர பதில்:
இதற்கு பதிலளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார் அப்போது அவர், இந்தியாவில் சிசு இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 40ஆக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த விகிதம் 21ஆகக் குறைந்துள்ளது. மேலும், பிறந்த ஒரு மாதத்துக்குள்ளான பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் நமது அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் 25ஆகவும், ஆந்திரத்தில் 30ஆகவும் உள்ளது என்றார். வளர்ந்த மாநிலம் என்று சொல்லக்கூடிய குஜராத்தில்கூட பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் 30ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆயிரத்துக்கு 14 என்ற அளவுக்கு கட்டுப்பட்டுள்ளது.
குழந்தைகள் இறப்பு ஏன்?
தர்மபுரி அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த 14ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை 11 குழந்தைகள் உயிரிழந்தன. அதில், 5 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் எடை குறைவாகக் காணப்பட்டன. நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளும் வளர்ச்சியடையவில்லை. இதனால், தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனளிக்காமல் குழந்தைகள் இறந்துவிட்டன.
தர்மபுரியில் பிறக்கவில்லை
இன்னும் இரண்டு குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் பிறந்து, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவை. இறந்த 11 குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் மட்டுமே அந்த மருத்துவமனையில் பிறந்தவை. மற்ற குழந்தைகள் அனைத்தும் ஆபத்தான நிலையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவை.
பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு
தமிழகத்தில் உள்ள 64 பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. இதற்கு மாநில அளவில் ஓர் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஓர் ஒருங்கிணைப்பு அதிகாரி, 7 முதல் 20 மருத்துவர்கள், மொத்தம் 1,116 செவிலியர்கள், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள் என தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அரசு காரணமல்ல
எனவே, இந்தக் குழந்தைகளின் இறப்புக்கு எந்தக் கட்டமைப்பு குறைபாடும் காரணம் இல்லை. மருத்துவர்கள் குறைபாடோ, நோய்த்தொற்றோ, உபகரணங்கள் குறைபாடோ, மருத்துவர்கள், செவிலியர்கள் குறைபாடோ இல்லை. மேலும், எந்த வகையிலும் இந்த நிகழ்வுக்கு அரசு காரணமில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications