Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லையா.. ஓ பன்னீர்செல்வம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி கட்டுவோருக்கு பொங்கல் பரிசாக 1000 ரொக்கம் இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

No Pongal gift of Rs 1,000 for govt employees, and income tax payers? ops condemns

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு அறிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாக மகளிர் உரிமை தொகையை போல், பொங்கல் பரிசும், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு கிடைக்காது. இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினைத் தர மறுக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

05-01-2024 அன்று முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை நடுவு நிலைமைக்கு எதிரான செயலாகும்.

பழைய ஓய்வூதியத் திட்டம், விடுப்பினை சரண் செய்து பணமாக்குதல் என பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களும், பொதுத் துறை ஊழியர்களும் இழந்து இருக்கிறார்கள். அகவிலைப்படி உயர்வு தாமதமாக வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வருமானத்திற்கேற்ப வருமான வரி செலுத்துகிறார்கள்.

அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதே வருமான வரி உள்ளிட்ட பல வரிகளின் மூலம் தான். உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசு திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு அதன் பயனை அளிக்காதது கடும் கண்டனத்திற்குரியது. பெரிய, பெரிய தொழிலதிபர்களைத் தவிர்த்து வருமான வரி செலுத்தும் பெரும்பாலானோர் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான். கல்விக் கடன், வீட்டுக் கடன், நகைக் கடன், வாகனக் கடன் என பல கடன்களை வாங்கி, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு என பல நிதிச் சுமைகளை தாங்கி, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களின் நிலைமையும் இதேதான். இவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்களா? இவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா? இவர்கள் எல்லாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டாமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதுபோல், பொங்கல் பரிசு வழங்குவதிலும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. இருக்கின்ற சலுகைகளை பறிக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

நடைமுறையில் இருக்கின்ற சலுகைகளை அனுபவிக்கும் வகையிலும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலும், 1,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+