காற்றழுத்த தாழ்வு மண்டலம் எஃபெக்ட்: அம்பத்தூரில் 20 செ.மீ மழை- ரமணன் தகவல்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு கடலோர மாவட்டங்களில் மழை குறையும் என்றும் தமிழக வடமாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மதியம் புதுச்சேரி கடல்பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன்.

அவர் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தால் அதன் பிறகு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அளவு குறையும். கரையை கடந்த பிறகும் நகரில் ஒருநாள் முழுவதும் ஆங்காங்கு விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேநேரம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் கடந்து சென்று அரபிக்கடலை அடையும் என்பதால், அது கடந்து செல்லும் பாதையில் அமைந்துள்ள, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களிலும், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்ய கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை, அம்பத்தூரில் 20 செ.மீ, சீர்காழியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. கடலில் சீற்றம் இருக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம், புழல், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் தலா 19 செ.மீ மழையும், காரைக்கால், மகாபலிபுரம், பூந்தமல்லி, கேளப்பாக்கம் பகுதிகளில் தலா 18 செ.மீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications