மக்கள் காதில் பூ சுற்றாதீர்கள்... முதலீட்டாளர் மாநாடு குறித்து விஜயகாந்த் தாக்கு!
சென்னை: மக்களை ஏமாற்றவும், பல்வேறு பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவுமே முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் புள்ளியியல்துறை 2014 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இப்பிரச்னையிலிருந்து தமிழக மக்களை திசை திருப்பவே அந்த சமயத்தில் "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை" 2014 அக்டோபர் மாதத்தில் நடத்துவதாக அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் அதை நடத்தாமல் மீண்டும், 2015 மே 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுமென அறிவித்து அதையும் நடத்தவில்லை.

தேர்தலை மனதில் கொண்டு...
அது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின் சுயநலநோக்கோடு, அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை" வரும் செப்டம்பர் 9, 10 ஆம் தேதிகளில் நடத்துகிறது.

மக்களை ஏமாற்றும் செயல்...
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் என பலவும் மூடப்பட்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக அரசின் பதவிகாலம் ஆறுமாத காலமே இருக்கின்றபோது மக்களை ஏமாற்றவும், பல்வேறு பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவுமே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எந்த பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட போவதில்லை.

தவறான வரிக் கொள்கை...
நோக்கியா, பாக்ஸ்கார்ன், ரெனால்டு நிஸான் போன்ற பெரிய தொழிற்சாலைகள் அதிமுக அரசின் தவறான வரிக் கொள்கையால் தமிழகத்தை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரெனால்டு நிஸான் கார் தொழிற்சாலைக்கு அதிமுக அரசு சுமார் 2,800 கோடி ரூபாய் வரித்தொகையை இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்ததால், அந்நிறுவனம் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. இப்பிரச்னையால் மேலும் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதை இந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

வேடிக்கை...
தமிழகத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகளையே தக்கவைத்துக்கொள்ள முடியாத அதிமுக அரசு, வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து தொழில் துவங்குகிறோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

கூரையேறி கோழி பிடிக்க முடியவில்லை...
இந்த லட்சணத்தில் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சியின் கடைசி ஆறுமாத காலத்தில் "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை" நடத்துவது தொழிற்துறை வரலாற்றில் முதன்முறை என்றும், அதன் மூலம் ஒரு லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டை கொண்டு வரப் போவதாகவும் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது" கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக்கீறி வைகுண்டத்தை காட்டுகிறேன்" என சொல்வதைப்போல் உள்ளது.

தூங்கிக் கொண்டிருந்தாரா?
ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகாலத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல், இந்த ஆறு மாதகாலத்தில் செய்து முடிப்பதாக சொல்வதை கேட்ட தமிழக மக்கள் இதுவரை முதல்வர் ஜெயலலிதா என்ன தூங்கிக் கொண்டிருந்தாரா? என கேட்கிறார்கள்.

மக்களின் காதில் பூ சுற்றவேண்டாம்....
மாற்றம் கொடுத்த மக்களுக்கு இதுவரை கொடுத்த ஏமாற்றமே போதும், இனியும் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றாமல், அவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications