அரசியல்வாதிகளுக்குத்தான் தேர்வு வைக்க வேண்டும்... ஒன்இந்தியா வாசகரின் அதிரடி!
தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. உண்மையில் அரசியல்வாதிகளுக்குத்தான் தகுதித் தேர்வு தேவை என்று ஒன்இந்தியா வாசகி கூறியுள்ளார்.
சென்னை : மாணவர்களுக்கு உயர் படிப்புகளுக்கு தகுதித் தேர்வு வைப்பது போல அரசியல்வாதிகளுக்கும் தேர்வு மற்றும் நேர்காணல் வைத்தே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒன்இந்தியா வாசகர் சங்கீதா தனது உளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளர்.
அனிதாவின் தற்கொலைக்கான நீதி என்னவாக இருக்கும், அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது என்ன என்று ஒன் இந்தியா இணையதளத்தில் வாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. சங்கீதா என்ற வாசகி அனுப்பிவைத்துள்ள குரல் பதிவில் உள்ள கேள்விகள் நெஞ்சில் ஊசியை ஏற்றுகின்றன.
தனது உளக்குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார் சங்கீதா. நீட் தேர்வு தமிழகத்திற்கு அறவே வேண்டாம் என்பதே அவரின் தீர்க்கமான குரல் பதிவு. அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ:
அரசே காரணம்
அனிதா இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு படித்தற்கு பயனில்லாமல் போய்விட்டது , இதற்கு இப்போதுள்ள அரசுகளே காரணம். மாணவர்களின் தேவையை கூட பூர்த்தி செய்யாத அரசாகத் தான் இந்த அரசு இருக்கிறது. யாருக்காவது கஷ்டம் என்றால் அவர்களுக்கு சரியான தீர்வை கொடுக்கத் தவறுகிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கும் தேர்வு
ஓட்டு வாங்கும் போது காலில் விழுபவர்கள், நாம் இடறி விழும் போது கைகொடுக்க மறுக்கிறார்கள். அரசு வேலை, படிப்பு என அனைத்திற்கும் தேர்வு வைக்கிறார்கள். அதே போல அரசியலிலும் தேர்வு வைக்க வேண்டும், நேர்காணல் நடத்த வேண்டும், அதில் வெற்றி பெறுபவர் மட்டுமே தலைவராக வேண்டும்.

எல்லோரும் தலைவரல்ல
அப்படி செய்தால் மட்டுமே படித்தவர்களோடு அவர்கள் பணியாற்ற முடியும். எல்லோரையும் தலைவர் என கொண்டாடக் கூடாது. எல்லோருமே வரும்போது நன்றாகத் தான் வருகிறார்கள், ஆனால் அதற்குப் பின்னர் அவர்களின் செயல்பாடுகளோ ஒழுங்குமுறை நடவடிக்கைகளோ சரியாக இருப்பதில்லை.

ஏன் டாக்டர் ஆகக் கூடாது?
அனிதாவின் உயிர் காவு வாங்கப்பட்டிருக்கிறது, ஈடுகட்ட முடியாத பெரும் இழப்பு இந்த நாட்டிற்கு. அனிதா என்ன தப்பு செய்தார் டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்டது ஒரு தப்பா. கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆகக் கூடாது?

ஏழைகளுக்கு ஏற்ற தீர்வு
பணக்காரர்களும், வசதி படைத்தவர்களும் மட்டுமே தான் மருத்துவராக வேண்டுமா?. ஏழைகளுக்கான இவர்களுக்கான வாய்ப்பை ஏன் அரசு மறுக்கிறது. காசு வைத்திருப்பவர்கள் என்னவேண்டுமானாலும் செய்து மெடிக்கல் சீட் வாங்கிவிடுவார்கள், கிராமப்புற மாணவர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு ஏற்றார் போலத்தானே தீர்வை கொண்டு வர வேண்டும்.

ஏன் நீட்?
அதைவிடுத்து நீட் தேர்வு நடத்துவேன் என்று ஏன் சொல்கிறீர்கள். இதற்கு முன்னர் மருத்துவம் படித்தவர்கள் நீட் தேர்வு எழுதித் தான் மருத்துவரானார்களா, எத்தனையோ போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்களை பிடித்துவிட்டீர்களா.
Recommended Video


அரசியலுக்காக நடந்தது
அனிதாவின் மரணத்தில் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே காரணம், வேறு யார் மீது குற்றம் சொல்ல முடியாது, இனியும் தடுக்க வேண்டுமானால், நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று ஒன்று கூடி போராட வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் நீட் தேர்வை எதிர்த்து போராடினால் வெற்றி பெற முடியும்.

வாழவே பயமாக உள்ளது
இப்போது உள்ள அரசியலில் யாரும் சரி கிடையாது. பரீட்சை எழுதி இன்டர்வியூ நடத்தித் தான் அரசியல்வாதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் வாழவே பயமாக இருக்கிறது. அப்போதெல்லாம் சுடுகாட்டைப் பார்த்தால்தான் பயமாக இருக்கும் ஆனால் இன்றைய சூலில் சுடுகாட்டில் கூட போய் நின்று விடலாம், ஆனால் இந்த நாட்டில் வாழவே பயமாக இருக்கிறது.

அரசியல் சீராக்கப்பட வேண்டும்
அரசியல் சீர் செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு ஆண்டும், இது போன்று மாணவர்களை, மக்களை நாம் இழக்கத் தான் வேண்டும். பாலியல், வன்கொடுமை, கொலை, கொள்ளை என்று நாடு எங்கோ சென்றிருக்கிறது, வரும் தலைமுறை இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது, என்று சங்கீதா வெடித்தெழுந்தள்ளார்.












Click it and Unblock the Notifications