உகாண்டா பெண்களுக்கு உதவுங்க.. மோடிக்கு ஒன்இந்தியா தமிழ் வாசகியின் நெகிழ்ச்சி கோரிக்கை
உகாண்டா பெண்களுக்கு உதவ வேண்டும் என நமது வாசகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: உகாண்டா... வறுமையில் என்றுமே உழலும் நாடு. கல்வி, வேலைவாய்ப்பு. அறிவியில் வளர்ச்சி, தொழில்நுட்பம் ஒன்றிலும் இதுவரை முன்னுக்கு வராத ஒரு நாடு. ஆனால் பஞ்சம் மட்டும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. இதில் பெரிய அவலம் என்னவென்றால், அங்குள்ள வயது வந்த பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சமயங்களில் நாப்கின்கள் கூட வாங்க கதியற்று கிடப்பதுதான்.
நல்ல தொழில் இல்லை, போதிய வருமானம் இல்லை. அன்றாடங்காய்ச்சிகளாய் அலைந்து திரியும் குடும்பத்தினரால் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நாப்கின்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சரி, இதுகூட நம்ம நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலைதான். ஆனால் வயது வந்த 12, 13 குழந்தைகளை திருமணமே செய்து கொடுத்து விடும் கொடூரம் நடந்து வருகிறது. இதுபோல எங்காவது நடக்குமா? ஒரு பெண் திருமண வயதை அடைந்துவிட்டாலோ, அல்லது கடமையை முடித்து கொள்வதற்காகவும் திருமணம் செய்து தரலாம்.

12 வயதிலேயே திருமணம்
ஆனால் நாப்கின்கள் வாங்க முடியாத நிலைமைக்காக திருமணம் செய்யலாமா? நாப்கின் வாங்க முடியவில்லை என்று திருமணம் செய்து வைப்பது என்பது இன்னொரு கொடுமை அல்லவா? 12, 13 வயது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்களின் உடல், மனம் எப்படி பலம் பெறும்? இதைத்தான் ஒன் இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன்பு பகிரங்கப்படுத்தி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருந்தது.

ஒலி வடிவில் கோரிக்கை
ஆனால் இந்த செய்தி நம் வாசகர் சங்கீதாவை பாதித்து விட்டது. அதன் விளைவு... பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து ஒரு ஆடியோவை நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ஒலிவடிவில் அவர் இப்படி கூறுகிறார்:
உகாண்டா நாட்டு நாப்கின்களை வாங்கக்கூட வழியில்லாத காரணத்தினால், அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளை சீக்கிரமாகவே திருமணம் செய்து வைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும். 12, 13-வயதிலேயே திருமணம் என்றால் உடல், மன ரீதியாக அந்த பிள்ளைகள் பாதிக்கப்படுவார். நம் நாட்டில் இருந்தால்தான் உதவ வேண்டும் என்றில்லை. மனிதாபிமானமும், நல்ல மனசும் இருந்தால் யார் வேண்டுமானாலும் உதவலாம். அந்த நாட்டு பெண்களுக்கு உதவி செய்ய எனக்கு போதிய வருமானம் இல்லை. நீங்களோ இந்த நாட்டின் பிரதமர். உங்களால் நிச்சயமாக அவர்களுக்கு உதவ முடியும்.

பிரதமர் உதவ வேண்டும்
இரண்டு தினங்களுக்கு முன்னாடி நீங்க உகாண்டா சுற்றுப் பயணம் செய்யப்போவதாக ஒரு செய்தி படித்தேன். நீங்கள் அங்க போவதாக அறிந்துதான் இதை உங்களுக்கு சொல்கிறேன். அந்த சிறுமிகளுக்கு நீங்கள் உதவி செய்யணும். தமிழக அரசு எப்படி எல்லா பள்ளிகளிலும் இலவச நாப்கின்களை கொடுத்து மாணவிகளுக்கு உதவி செய்கிறதோ, அதேபோல அந்த நாட்டு பெண்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த நீங்கள் முன் வரவேண்டும். அப்படி நீங்க செஞ்சா.. அந்த பெண் குழந்தைகள் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அவங்கள பெத்த தாய்மார்களும் மகிழ்ச்சியடைவாங்க.. இதை இந்த ஆடியோ மூலமாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். ப்ளீஸ் மோடி சார்,... அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க."
மோடி உதவுவாரா?
இப்படி நம் வாசகர் சங்கீதா அந்த ஆடியோவில் உருக்கமாக கேட்டுள்ளார். நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பயணம் மேற்கொள்ளும் நம் பிரதமர் தென்கோடி தமிழகத்திலிருந்து எழுப்பும் இந்த குரலை கேட்டு உகாண்டா பெண்களுக்கு உதவுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications