சென்னையில் சிலிண்டர் வெடித்து பெண் பலி- 4 பேர் படுகாயம்
சென்னை: சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் தீயில் கருகி உயிரிழந்தார். அவரது கணவரும் மகள்கள், பேத்தியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் மல்லிகா என்பதாகும். இவர் கொளத்தூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் அண்ணாமலை(வயது 58) என்பவரின் மனைவியாவார். அண்ணாமலை ஹைகோர்ட்டில் குமாஸ்தாவாக உள்ளார். இவர்களுக்கு மாலதிஸ்ரீ (32), செல்வி (28) ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர்.

இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதில் மாலதிஸ்ரீ பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். செல்வி அருகில் உள்ள தெருவில் குடியிருந்து வருகிறார்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று மாலையில் தாய் வீட்டிற்கு செல்வி வந்திருந்தார். நேற்றிரவு அண்ணாமலை, மல்லிகா, மகள்கள், பேத்தி அகிலா (13) ஆகியோர் படுத்து தூங்கினார்கள்.
காலை 6 மணியளவில் மல்லிகா சமையல் அறைக்கு சென்று காபி போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.
இதில் இடி விழுந்தது போல சத்தம் கேட்டது. வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. தீயில் கருகிய மல்லிகா கட்டிட இடிபாட்டில் சிக்கி அதே இடத்தில் உயிர் இழந்தார்.
வீடு தரைமட்டமானதில் படுக்கை அறையில் இருந்த அண்ணாமலை, மாலதிஸ்ரீ, செல்வி, அகிலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அண்ணாமலையும், மாலதியும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் அருகில் உள்ள 3 வீடுகளும் சேதம் அடைந்தன. ஜன்னல் கண்ணாடிகள், சிலாப்புகள் உடைந்து விழுந்தன.
சிலிண்டர் வெடித்ததில் அந்த வீடு முழுவதும் சிதைந்து சின்னாபின்னாமாகி விட்டது. அந்த பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
அண்ணாமலையின் மோட்டார்சைக்கிள் சேதம் அடைந்தது. வீட்டின் முன்பு நின்ற ஆட்டோவும் நொறுங்கியது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சிவராஜ் (24) என்ற வாலிபரின் தலையிலும் காயம் ஏற்பட்டது.
தீயில் கருகி உயிர் இழந்த மல்லிகாவின் உடலை இடிபாடுகளில் இருந்து தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த நால்வரையும் மீட்ட தீயணைப்பு படையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கேஸ் சிலிண்டரின் இணைப்பை மூடாமல் சென்றதால் அதில் இருந்து கேஸ் கசிந்துள்ளது. சமையல் அறையின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் கேஸ் சமையல் அறை முழுவதும் நிரம்பி இருந்தது. வாசனையை உணராமல் வழக்கம் போல சமையல் அறைக்கு வந்து மல்லிகா அடுப்பை பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து விட்டது.
சமையல் அறையில் மேலும் 4 சிலிண்டர்கள் இருந்துள்ளன. இதில் பயன்பாட்டில் இருந்த சிலிண்டர் மட்டுமே வெடித்துள்ளது. மீதமுள்ள 3 சிலிண்டர்கள் காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் தரைமட்டமான வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தினர். சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications