புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு வயிற்றிலேயே குழந்தையை பறிகொடுத்த தாயும் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பெரிய காலனி ஜி.ஆர்.பி.நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் கவுரி வயது 36. இவருக்கும் திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் 1 பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான முரளிதரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கவுரி 2-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து பிரசவதிற்காக திண்டிவனத்தில் இருந்து விழுப்புரத்திற்கு வந்திருந்தார்.
இவருக்கு கடந்த 1 மாதமாக அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு வந்தது. இதனால் அவரை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கவுரிக்கு நேற்று முன்தினம் அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் கவுரியின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதனிடையே வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பரவியதால் அந்த குழந்தையும் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து கவுரியை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கவுரியின் உடல் திண்டிவனம் கிடங்கல் 1-ல் உள்ள கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனையில் 13 பேர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுவையில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications