திதி கொடுக்க சென்றவர்களை.. விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே திதி கொடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 13 பேர் படுகாயம் அடைந்ததனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(30 ). இவர் அங்கு இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

ரமேஷின் பாட்டி இறந்த 16-ம் நாள் திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகைக்கு சென்றுள்ளனர். இதேபோல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் திதி கொடுக்க அம்பராம்பாளையம் ஆற்றின் பகுதிக்கு வந்திருந்தனர்.
அப்போது அங்கு திடீரென கூட்டம் கூட்டமாக பறந்து வந்த மலைத் தேனீக்கள் கூட்டத்திற்குள் புகுந்து பொது மக்களை சராமரியாக கொட்டத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார்கள். ஆனாலும் தேனீக்கள் விடாமல் அவர்களை துரத்தி, துரத்தி கொட்டின. தேனீக்கள் கொட்டியதால் ரமேஷ் என்பவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் , தேனீக்கள் கொட்டியதில் பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தாலுகா போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திதி கொடுக்க சென்ற இடத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications