கொட்டிய மழை... ஸ்தம்பித்த சென்னை போக்குவரத்து... சாலை வெள்ளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்!
சென்னை: சென்னையில் கொட்டிய கனமழையால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தில் சிக்கிய இளைஞரின் உடலை மீட்க அமரர் ஊர்தி வர சில மணி நேரம் ஆன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கடந்த திங்களன்று சென்னையில் கொட்டிய கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென ஓடியது. நீரில் வாகனங்கள் நீந்திச் சென்றன. இதனால் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஐந்து நிமிடத்தில் சென்றடையக் கூடிய இடங்களுக்கு செல்ல, ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

இந்நிலையில், சிறுசேரியிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மழை நீரில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கினார். ஹெல்மெட் அணியாததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய இளைஞர் சிறுசேரியில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவன ஊழியர் கோபிநாத் என தெரிய வந்தது. வேலூரைச் சேர்ந்த இவர் சோழிங்கநல்லூரில் தங்கியிருந்தார்.
கோபிநாத் வண்டிக்கு பின்னால் வந்த அவரது நண்பர்கள் உடனடியாக 108 ஆம்புலம்ன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் விபத்து நிகழ்ந்த இடத்தை அடையவே, அரை மணி நேரத்திற்கும் மேலானது. அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவக்குழு, கோபிநாத்தை சோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமரர் ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமரர் ஊர்தி, மூன்று மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து கோபிநாத்தின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக அமரர் ஊர்தி வர தாமதம் ஆனதால், அதுவரை கோபிநாத்தின் உடலை சாலையின் ஓரமாக மழை நீரிலேயே அவரது நண்பர்கள் வைத்திருந்தனர்.இந்த சம்பவம் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.












Click it and Unblock the Notifications