அம்மா வழியில் அதிமுகவை வழி நடத்துவோம்- எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்ற ஓபிஎஸ்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா வழியில் கழகத்தை தொடர்ந்து வெற்றி பெற்றிட அயராது பாடுபடுவோம் என்று ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் 11 உறுதி மொழிகளை ஏற்றுக்கொண்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 29வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என பலர் எம்ஜிஆர் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

குவிந்த தொண்டர்கள்
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக நினைவிடம் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

மலர்வளையம் வைத்து அஞ்சலி
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.30 மணி அளவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தார். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் - பொன்னையன்
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, செம்மலை, தலைமை நிலைய நிர்வாகிகள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஆர்.வைத்திலிங்கம், எஸ்.ஆர்.விஜய குமார் மற்றும் பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், தளவாய் சுந்தரம், சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெற்றிவேல், கலைராஜன், வி.என்.ரவி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பக்தர்களுக்கு அன்னதானம்
எம்.ஜி.ஆர். நினைவு நாள் என்பதால் மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நினைவிடத்துக்கு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அம்மா வழியில் அதிமுக
எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் 11 அதிமுகவினர் உறுதிமொழிகளை ஏற்றனர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா வழியில் கழகத்தை தொடர்ந்து வெற்றி பெற்றிட அயராது பாடுபடுவோம் என்று கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பழைய நினைவுகளில் மூழ்கிய அதிமுகவினர்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு ஜெயலலிதா தலைமையில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு உறுதி மொழி ஏற்பார்கள். ஜெயலலிதா தொண்டர்கள் மத்தியில் பேசுவார். இந்த ஆண்டு ஜெயலலிதா காலமானதை அடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது பழைய நினைவுகளை அசைபோட்டு பேசி சிரித்தனர். ஒரு வித இறுக்கம் தாளர்ந்திருந்தது.

போயஸ் தோட்டத்தில் சசிகலா
போயஸ் கார்டன் இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும், டெல்லியில் உள்ள கழக அலுவலகத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மற்றும் எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.












Click it and Unblock the Notifications