எடப்பாடி பக்கம் தாவிய மகளிர் அணி முக்கிய புள்ளி.. தேர்தல் ஆணைய முடிவால் காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தால் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயதேவி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது ஓபிஎஸ் அணியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் 12 கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
அதிமுகவில் இரட்டைத் தலைமையாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடந்தாண்டு ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்ஸையும் கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து, தீர்ப்பு விவரங்களை பரிசீலித்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம், ஈபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கட்சியில் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுக்கு மத்தியில் இது ஓபிஎஸ் தரப்புக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட என்.ஜெயதேவி நேற்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளி எடப்பாடி பக்கம் தாவியுள்ளார்.
மேலும் சென்னை மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 12 கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு பலரும் தாவி வருவதால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications