'மெர்சல்' படத்திற்காக எடப்பாடியை சந்தித்த விஜய்... பழ.கருப்பையா விமர்சனம்
தினகரனுக்காக சிறைச்சாலைகள் காத்துக் கிடக்கின்றன என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: சசிகலாவின் குடும்பத்தினரின் வாழ்க்கை சிறையில்தான் முடியும் என்றும் தினகரனுக்காகவே சிறைச்சாலைகள் காத்துக் கிடக்கின்றன என்றும் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சன் நியூஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் பழ.கருப்பையா கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். அவர்கள் எவ்வளவு வெற்றி கரமாக திகழமுடியும் என்பது அவர்கள் செயல்படுகிற நிலையை பொருத்தது ஆகும்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது சிதம்பர ரகசியம். அவருக்கே தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை. ஜெயலலிதா இருந்தபோதே கமலுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். ஆனால் சினிமா தொழிலை விட்டு விட கூடாது என்பதற்காக அவர் அப்போது அரசியலுக்கு வரவில்லை.

பணத்தை ஏன் திருப்பிக் கொடுக்கிறார்
வருவதென்றால் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். முதலில் கமல் பணம் திரட்டினார். பிறகு அந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்தார். அடுத்த மாதம் கட்சியை தொடங்குவார் என்றால் அந்த பணத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அவர் இன்னும் பின்தங்குகிறார். எனவே பணத்தை ஏன் வைத்திருக்கிறார் என்ற கேள்வி வரும் என்பதற்காக அவர் திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரும் போது...
தேர்தல் காலத்தில் அரசியலுக்கு வருவது என்ற போக்கை நடிகர்கள் விட வேண்டும். மக்களின் நலன்களுக்காக ஆளும்கட்சியாகவும் இருக்கலாம், எதிர்க்கட்சியாகவும் இருக்கலாம். பல சமயங்களில் எதிர்க்கட்சிகளாக இருந்து ஆளுங்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஒரு விவசாயி பருவமழையை எதிர்பார்த்து அரசியல் செய்வது போல் நடிகர்கள் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் செய்ய கூடாது.

உந்தி தள்ளும்போது வந்து விட வேண்டும்
நடிகர்கள் தேர்தல் வரும் போது கடையை விரிப்பது. வெற்றிபெற்றால் கடையை தொடர்ந்து நடத்துவது. இல்லாவிட்டால் மூடிவிட்டு போவது என்கிற மனப்பான்மையோடு நீங்கள் இருந்துவிட்டால் மக்கள் உங்களை பின்பற்ற மாட்டார்கள். டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்ற பேச்சு 10 ஆண்டுகளாக ஓடுகிறது. ஏதாவது உணர்வு ஒன்று உந்தி தள்ளும்போது அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்து விட வேண்டும். ஆராய்ச்சியெல்லாம் செய்ய கூடாது.

மக்களுக்காக பேச முடியாது
நடிகர் விஜய் தனது மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். இவர் இப்படிப்பட்ட மனநிலையோடு இருந்தால் ஒரு காலத்திலும் மக்களுக்காக பேசமுடியாது. யாருக்காக நீங்கள் பேசுகிறீர்களோ அவர்களுக்கு எதிரானவர்கள் எல்லாம் உங்களை எதிர்ப்பார்கள் என்றார் பழ.கருப்பையா.

சிறையில்தான் வாழ்க்கை முடியும்
மோடியின் குஜராத் தேர்தலில் ஏற்பட்ட அவரது அரசியல் ஏற்றம் அந்த தேர்தலோடு முடிவடைந்துவிட்டது. 2019-இல் மோடி ஆட்சி இருக்காது. தன் முயற்சியில் ஆட்சி வந்ததாக கூறும் எடப்பாடி அதற்கு முன்னர் எதற்காக வளைந்து கூனி குறுக வேண்டும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு சென்றுவிட்டனர். நடராஜன், பாஸ்கரனின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தினகரனுக்காக சிறை சாலைகள் காத்து கிடக்கின்றன. சசிகலா குடும்பத்தினர் 25 பேரின் வாழ்க்கை சிறைச் சாலையில்தான் முடியும். அதில் தினகரன் மட்டும் தப்ப முடியாது.












Click it and Unblock the Notifications