”கூலிங் ஸ்டிக்கர்” .. தடையை மீறி கார்களை இயக்கும் உரிமையாளர்கள்…

சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறி கோவை நகரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
"வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புற கண்ணாடிகள் 70 சதவீதம், பக்கவாட்டு கண்ணாடிகள் 40 சதவீத வெளிப்படைத்தன்மை கொண்டிருத்தல் அவசியம்" என அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்தந்த மாநில அரசுகள் உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் வாகனங்களில் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரை அகற்றிக் கொள்ள உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறி இயக்கப்படும் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உலா வரும் வாகனங்கள் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளன. அரசியல் கட்சியினர், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினரும் இந்த விதிமீறலில் தாராளமாக ஈடுபடுகின்றனர்.
கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கன், ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலைகாரர்கள் இருவரும் கருப்பு ஸ்டிக்கர் வாகனம் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட சில நன்மைகள் உள்ள போதும் கடத்தல், கற்பழிப்பு, விபசாரம் உள்ளிட்ட இதர சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு சாதகமாக இவை உள்ளன.
தமிழகத்தில் வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி.,கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க அரசு முடிவு செய்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பட்டியல் குறித்த விபரங்களை அரசு வெளியிடவில்லை.
தகவல் உரிமை சட்டத்தில் இதன் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போக்குவரத்து போலீசார் கூறுகையில்,''சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி வாகனங்களின் கண்ணாடிகளில் வெளிப்படைத்தன்மை இருத்தல் அவசியம். விதி மீறும் வாகனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றனர்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவை மதிக்க வேண்டிய கடமை நாட்டிலுள்ள அனைத்து குடிமகன்களுக்கும் உள்ளது. இதை அறிந்து அனைவரும் நடந்தால் மட்டுமே சுப்ரீம்கோர்ட் உத்தரவின் நோக்கம் முழுமைபெறும் என்பதில் மாற்றமில்லை.












Click it and Unblock the Notifications