10 நாளாச்சு இன்னும் பரிதவிக்கும் பேராவூரணி சுற்றுப் பகுதிகள்.. குமுறலில் மக்கள்!
பேராவூரணி: கஜா புயல் தாக்கி பத்து நாட்களாகியும் பேராவூரணி சுற்றுப் பகுதி கிராமங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. மின்சாரம் இன்னும் பெரும்பாலான பகுதிகளுக்கு வரவில்லை. தொகுதி எம்எல்ஏ என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மக்கள் பெரும் குமுறலில் உள்ளனர்.
கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் தஞ்சையும் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கஜா புயலில் சிக்கி சீரழிந்துள்ளன. அதில் பேராவூரணி தாலுகாவும் ஒன்று.
பேராவூரணி தாலுகாவில் உள்ள பல கிராமங்கள் முற்றிலும் நிர்மூலமாகியுள்ளன. பல ஆண்டுகள் பிடிக்கும் இப்பகுதி மக்கள் மீண்டு வருவதற்கு. அந்த அளவுக்கு இங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

10 நாளாகியும் சீரடையவில்லை
கஜா புயல் வந்து 10 நாட்களாகி விட்டது. இன்னும் பேராவூரணி தாலுகாவில் உள்ள கிராமங்கள் முழுமையாக சீரடையவில்லை. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

குடிநீர் பிரச்சினை இல்லை
தற்போது அங்கு குடிநீர்ப் பிரச்சினை சற்று குறைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் பஞ்சாயத்து குடிநீர் திரும்ப வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடிநீர் பிரச்சினை ஓரளவு தீர்ந்துள்ளது.

கிராமங்கள் சீரடையவில்லை
பெரும்பாலான நகரப் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு விட்டன. மரங்களை வெட்டி அகற்றி ஓரம் கட்டியுள்ளனர். ஆனால் உட்புறக் கிராமங்கள் இன்னும் அப்படியேதான் உள்ளன. பல கிராமங்களில் முழுமையாகவே சீரமைக்க வேண்டியுள்ளது.

நிவாரணப் பொருட்களில் சிக்கல்
பெரும்பாலான பகுதிகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளில் பெரும் குழப்பங்கள் உள்ளன. அதாவது தன்னார்வத் தொண்டர்கள் கொண்டு வந்து தரும் நிவாரணப் பொருட்களை ஆங்காங்கே சிலர் மறித்து வாங்கிக் கொள்வதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவை கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளன. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குறிப்பாக தொலை தூரக் கிராமங்களில் இருப்போர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மின்சாரம் சரியாகவில்லை
மின் இணைப்புகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது. அது அத்தனை சீக்கிரம் முடிய வாய்ப்பில்லை. பகுதி பகுதியாகத்தான் மின்சார விநியோகம் தரப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பகுதிகளில் இன்னும் முழுமையாக மின்சாரம் வரவில்லை.

மன வலிமைக்கு
மக்களுக்கு இப்போது மிக முக்கியமான தேவையே மன ஆறுதல்தான். நாங்க இருக்கோம், கவலைப்படாதீங்க. எல்லாவற்றையும் மீட்டு வந்து விடுவோம், மீண்டு வருவோம் என்ற வார்த்தைகள்தான் அவர்களுக்குத் தெம்பு தரும். காரணம், இவர்கள் கடின உழைப்பாளிகள், ஊருக்கே படியளந்தவர்கள். எனவே இவர்கள் நிச்சயம் மீண்டு வருவார்கள். ஆனால் இப்போது பெரும் துயரில் மூழ்கியுள்ளனர். அதிலிருந்து மீண்டு வர மன ஆறுதல் தேவை. அதைக் கொடுப்பவர்கள்தான் அதிகம் தேவை. அதைச் செய்தாலே போதும்.. பாதி தெம்பு கிடைத்து விடும் இந்த மக்களுக்கு.

எம்எல்ஏ எங்கப்பா
புயல் பாதித்த பகுதி மக்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு தங்களது எம்எல்ஏவை இந்தப் பக்கமே காணவில்லை என்பதே. பல கிராமங்களிலும் அந்த முனுமுனுப்பும் அதிருப்தியும் நிறையவே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ, மக்கள் சிரமப்படும் நேரத்தில் அவர்களுடன் இருப்பதுதான் தர்மம். அந்த தர்மத்தை பேராவூரணி எம்எல்ஏ மீறக் கூடாது.. இனியும் தாமதிக்காமல் அவர் மக்களின் குறைகளைத் தீர்க்க முன்வந்தால் நல்லது.












Click it and Unblock the Notifications