பலாத்காரம் செய்த நபரிடம் ரூ. 1 லட்சம் வாங்கிக் கொண்டு சமாதானம் ஆன பெண்!
சேலம்: சேலத்தில் ஒரு வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், அவரிடமிருந்து ரூ. 1லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சமரசமாகியுள்ளார். இதை அவர் கோர்ட்டிலும் தெரிவித்தார். கோர்ட்டும் அதை ஏற்றுக் கொண்டு அந்த நபரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மங்கிய கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, மணிகண்டன் உறவு கொண்டுள்ளார். ஆனால், திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
இதையடுத்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு மணிகண்டனுக்கு பாலியல் பலாத்கார குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், திருமணம் செய்வதாக ஏமாற்றிய குற்றத்துக்காக கூடுதலாக 3 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இதையடுத்து, மணிகண்டன் கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், தண்டனையை எதிர்த்து மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், இந்த வழக்கில் நானும், புகார் கொடுத்த பெண்ணும் சமரசமாகிவிட்டதால் என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், 'நான் தற்போது வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடன் உடல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக என்னிடம் மன்னிப்பு கேட்ட மணிகண்டன் அதற்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். எனவே நாங்கள் இருவரும் சமரசமாக செல்ல விரும்புகிறோம். அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், 'திருமணம் செய்துகொள்வதாக உத்தரவாதம் கொடுத்து உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்வது பாலியல் பலாத்கார குற்றமாகாது. இந்த வழக்கில் இருவரும் சமரசமாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த 8 மாதமாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். எனவே, மீதமுள்ள காலத்தை அவருக்கு தண்டனை குறைப்பாக கருதி விடுவிக்க உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications