கிருஷ்ணகிரி: பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவன் தற்கொலை- மூவர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பள்ளியை விட்டு நீக்கி டிசி கொடுத்ததால் மனமுடைந்த மாணவன், எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக மாணவனின் உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் பிரசாந்த், 17. கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதவியல் பிரிவில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று பிரசாந்த் நடவடிக்கை சரியில்லை என கூறி மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு அனுப்புமாறு கூறியதன் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் சம்மந்தமூர்த்தி மாணவனுக்கு டிசி கொடுத்து அனுப்பியுள்ளார்.
தன் தவறை உணர்ந்த மாணவன், பள்ளிக்கு சென்று தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தன்னை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சொன்னால் தான் மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் என கூறி மறுத்து விட்டாராம். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்ற பிரசாந்த் தன்னை பள்ளியில் சேர்க்காததால் மனம் உடைந்து வீட்டில் இருந்து எடுத்து சென்ற எலி மருந்தை பள்ளி வளாகத்தில் வைத்து குடித்துள்ளார்.
அருகில் இருந்த மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக மாணவனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் நேற்று உயிரிழந்து விட்டார். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா, பொருளாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் சம்மந்தமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்யக்கோரி மாணவனின் உறவினர்கள், ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இரவு 11 மணி அளவில் மாணவன் உடலை பெற்றுச் சென்றனர். மாணவன் தற்கொலை தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ், பொருளாளர் ராஜா, தலைமை ஆசிரியர் சம்பந்தமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கல்லாவியைச் சேர்ந்த முத்துசாமி, 41, சிகாமணி 47, ஆனந்த், 25, மாதேஷ் 28, ஊத்தங்கரை லோகேஷ்,24, பொன்முடி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications