இலவசங்கள் கொடுத்து சீரழித்தது திராவிடம்.. அப்ப 'அம்மா ஸ்கூட்டரை' மோடி தொடங்கி வைப்பது?
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இலவசங்கள் கொடுத்து திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன என முழங்குகிறது பாஜக. ஆனால் அதிமுக அரசின் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடியே தொடங்கி வைக்கிறார் என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
50 ஆண்டுகால திராவிட கட்சிகளாள் தமிழகம் சீரழிக்கப்பட்டுள்ளது; இலவசங்கள் கொடுத்து நாசமாக்கிவிட்டனர் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. இதனால் கழகங்கள் இல்லாத தமிழகம் என பிரசாரம் செய்தது பாஜக.
ஆனால் அண்மையில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் திராவிட கட்சிகளின் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றை அப்படியே காப்பியடித்து அறிவித்தது. இது கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியது.

மோடி தமிழகம் வருகை
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம், புதுவைக்கு 2 நாட்கள் பயணமாக வரும் 24-ந் தேதி வருகை தர உள்ளார். சென்னையில் 24-ம் தேதியன்று தமிழக அரசின் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அதிமுக- பாஜக மோதல்
கடந்த சில வாரங்களாக தமிழக அரசை பாஜக தலைவர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். அமைச்சர்களும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

அதிமுகவின் அரசு விழாவில் மோடி
இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகை முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திராவிட கட்சியான அதிமுக அரசின் இலவச திட்டம் ஒன்றையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

எடக்கு மடக்கு பதில் வருமோ?
அப்படியானால் இலவசங்களை எதிர்த்து வந்த தமிழக பாஜக இனி அத்தகைய விமர்சனங்களை நிறுத்துமா? அல்லது அரசு மானியம்தான் தருகிறது; இலவசம் தரவில்லையே என எடக்கு மடக்காக விளக்கம் தருமா? என்கிற கேள்விகளும் எழுகின்றன












Click it and Unblock the Notifications