"இது வெறும் டிரெய்லர்..மெயின் பிக்சர் மே 11ம் தேதி மாமல்லபுரம் மாநாட்டில் இருக்கு”: அன்புமணி ராமதாஸ்
தஞ்சாவூர்: "இந்த மாநாடு வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. பாமகவின் அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடாக நடைபெறும்" என கும்பகோணம் அருகே நடைபெற்ற மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இந்த மாநாடு வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. பாமகவின் அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடாக நடைபெறும். " எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அன்புமணி ராமதாஸ், "இந்த சோழ மண்டலத்தில் அதிகமாக இருப்பவர்கள் விவசாயிகள் தான். இந்த விவசாயப் பெருங்குடி மக்களிடம் நான் கேள்வி கேட்க வேண்டும். இன்றைக்கு விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பாதுகாவலர் நமது அய்யா ராமதாஸ் தான். விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் குரல் கொடுத்து போராடுபவர் ராமதாஸ் அய்யா தான்.

ஆனால், ஏன் எங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? டெல்டா விவசாயிகளின் பாதுகாவலர் மருத்துவர் அய்யா. மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி என எந்தப் பிரச்சனை என்றாலும் போராளியாக வந்து நிற்பவர் அய்யா தான். இங்கு போட்டியிட்ட பாமக வேட்பாளரை, எங்கிருந்தோ வந்து இங்கு போட்டியிட்டவரிடம் தோல்வி அடைய வைத்துவிட்டீர்கள்.
இன்றைக்கு டெல்டாவையே அழித்திருப்பார்கள். பலகட்ட போராட்டங்கள் நடத்தி, திட்டங்களை ரத்தி செய்ய வைத்து டெல்டாவை காப்பாற்றியவர் ராமதாஸ் அய்யா. எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம். தொடர்ந்து இந்தச் சமுதாயத்திற்காகப் போராடி வருகிறோம். இதனை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications