வாரண்ட் இருந்தும் டிக்கெட் கேட்ட நடத்துநர்.. "எது டிக்கெட்டா.." கடுப்பான காவலர்.. அடுத்து பரபரப்பு
செங்கல்பட்டு: வாரண்ட் இருந்தும் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கச் சொன்னதால் நடத்துநரிடம் காவலர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் ஒருவர் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் பரவியது.

இது பேசுபொருள் ஆன நிலையில், அதன் பிறகு இரு தரப்பும் மாறி மாறி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டில் வாரண்ட் இருந்தும் நடத்துநர் டிக்கெட் வாங்கச் சொன்னதால் காவலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து ஒன்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாகத் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து நாங்குநேரி வந்த போது, ஆறுமுகப்பாண்டி என்ற காவலர் பஸ்ஸில் ஏறியுள்ளார். போலீஸ் யூனிபார்மில் இருந்த அவரிடம் நடத்துநர் டிக்கெட் கேட்டுள்ளார்.
இருப்பினும், டிக்கெட் எடுக்க மறுத்த காவலர், தானும் ஒரு அரசு ஊழியர் தான் என்றும் டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது என்றும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதை அந்த நடத்துநர் வீடியோவாக எடுத்துள்ளார்.
விளக்கம்: அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், போக்குவரத்து துறை இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது "அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி கிடையாது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும்.
மற்ற அனைத்து நேரத்திலும் போலீசார் டிக்கெட் எடுத்துத்தான் பயணிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
நடந்ததே வேறு: இத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், உண்மையில் அங்கு நடந்ததே வேறு.. தாம்பரம் பகுதியில் நோ பார்க்கிங்கில் அரசு பேருந்துகளை நிறுத்தியதாக டிராபிக் போலீசார் அபராதம் விதித்தனர். அத்துடன் கிளம்பாக்கத்திலும் இதேபோல அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் யூனிபார்ம் போடவில்லை, சீட் பேல்ட் அணியவில்லை என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இதனால் இது தரப்பிற்கும் இடையே ஒரு வித மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் செங்கல்பட்டில் நடத்துநருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது இருக்கும் விதிகளின்படி வாரண்ட் இருந்தால் அரசு பேருந்துகளில் காவலர்களால் இலவசமாகப் பயணிக்க முடியும்.
வாக்குவாதம்: செங்கல்பட்டில் ஏறிய அந்த காவலரிடம் வாரண்ட் இருந்துள்ளது. வாரண்டை காண்பித்த போதும் அதை முழுமையாகப் படிக்காமல் அந்த நடத்துநர் டிக்கெட் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த காவலர் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாரண்ட் இருக்கும் போது ஏன் டிக்கெட் கேட்கிறீர்கள் என்ற அந்த காவலர், முதலில் என்ன இருக்குனு முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு டிக்கெட் எடுக்கச் சொல்லுங்கள் என வாக்குவாதம் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications